தலைப்புச் செய்திகள்

ஓடி ஒளியும் தென்கிழக்குப் பல்கலைக்கழ உபவேந்தர்: நிர்வாகத் தோல்வி குறித்து பதிலளிக்க தயங்குகிறாரா?

– அஹமட் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் ஜுனைடீன் பதவிக்கு வந்த பின்னர், பல்கலைக்கழக மாணவர்களிடையே பேணப்பட்டு வந்த ஒழுக்க விடயங்களில் சீரழிவு நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத் தரப்புகள் வருத்தம் தெரிவிக்கின்றன.

தென்கிழக்குப் பல்கலைக்கழ உப வேந்தராக அண்மையில் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஷ்ட மாணவர்கள், முதலாமாண்டு மாணவர்களின் விடுதிக்குள் இரவு வேளையில் புகுந்து ‘பகிடிவதை’ எனும் பெயரில், அவர்களை அடித்து, தூஷண வார்த்தைகளில் பேசியிருந்தனர். இதனை பாதிக்கப்பட்ட மாணவர்கள் மறைத்து வைக்கப்பட்ட கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியது.

இந்த சம்பவம் நடந்து மூன்று வாரங்களின் பின்னரே, பகிடிவதை மேற்கொண்ட மாணவர்களுக்கு எதிராக, பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆயினும், இவ்விடயம் தொடர்பில் உபவேந்தருக்கு முன்னரே அறியக் கிடைத்ததாகவும், ஆனால், உபவேந்தர் இதனை மூடி மறைக்க முயற்சித்தார் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது இவ்வாறிருக்க, இந்த விடயம் தொடர்பில் உபவேந்தர் ஜுனைடீனுடன் தொலைபேசியில் பேசுவதற்கு – பல ஊடகவியலாளர்கள் முயற்சித்த போதிலும் அவர் பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

‘புதிது’ செய்தித்தளமும் உபவேந்தரின் தொலைபேசிக்கு பல தடவை அழைப்பெடுத்த போதிலும் பதில் கிடைக்கவில்லை. பின்னர் அவரின் ‘வாட்ஸப்’ இலக்கத்துக்குத் தகவலொன்றினை அனுப்பி வைத்த போது, அதற்கும் அவர் பதில் வழங்கவில்லை.

இதனையடுத்து, தனது நிர்வாகத் தோல்வி தொடர்பில் ஊடகவியலாளர்களுக்குப் பதிலளிக்க முடியாமல், உபவேந்தர் ஓடி ஒளிகிறாரா என்கிற கேள்வியினையும் ஊடகவியலாளர்கள் எழுப்புகின்றனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் கடந்த காலங்களில் ஜுனைடீன் பதவி வகித்திருந்தார். அந்தக் காலகட்டத்திலும் பொறியியல் பீட மாணவர்களின் பிரச்சினைகளை ஒரு பீடாதிபதியாக கையாள முடியாமல் ஜுனைடீன் தோல்வி கண்டிருந்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்னர் உபவேந்தர்களாகப் பதவி வகித்தவர்கள், ஊடகவியலாளர்களுடன் சிறந்த தொடர்புகளைப் பேணி வந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான பின் துாண்டல்கள் இருக்கலாம்; பீடாதிபதி ஜுனைதீன்