தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான பின் துாண்டல்கள் இருக்கலாம்; பீடாதிபதி ஜுனைதீன்

🕔 December 2, 2015

SEUSL - 02
– முன்ஸிப் –

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகத்துக்கு எதிராக, பொறியியல் பீட மாணவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் பின்னணியில் சில தூண்டுதல்கள் உள்ளதாகவும், அவ்வாறான தூண்டுதல்கள், பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான முயற்சியாக இருக்கலாம் எனவும், பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் குற்றம் சாட்டினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஒரு வாரமாக வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், பல்கலைக்கழக நிருவாகத்தினர் நேற்று செவ்வாய்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தினர்.

இச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே, பொறியியல் பீட பீடாதிபதி மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

”பொறியியல் பீட மாணவர்களின் கோரிக்கைகளை ஓர் இரவில் தீர்த்து வைக்க முடியாது. ஆனால், அவர்கள் அப்படித்தான் எதிர்பார்க்கின்றனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கான முதலாவது மாணவர் தொகுதியினர் 2013 ஆம் ஆண்டுதான் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இந்த நிலையில், அன்றிலிருந்து இன்றுவரை – இரண்டு வருடங்களுக்குள், நாங்கள் பொறியியல் பீடத்துக்குரிய பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளோம். இருந்தபோதிலும் சில குறைபாடுகள் உள்ளமையினையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

எமது பொறியியல் பீடத்தில் விரிவுரையாளர் பற்றாக்குறை நிலவுகின்றமை உண்மைதான். ஆனால், இது இந்தப் பல்கலைக்கலைக்கழகத்துக்கு மட்டும் உரித்தான பிரச்சினையல்ல. கிட்டத்தட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இந்த வகைப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன.

இருந்தபோதிலும், இந்தக் குறையினை நிவர்த்தி செய்யும் வகையில், ஏனைய பல்கலைக்கழகங்களிலுள்ள விரிவுரையாளர்களை அழைத்து, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துகின்றோம். இதிலுள்ள மற்றொரு சிக்கல் என்னவென்றால், இவ்வாறு நாம் அழைக்கின்ற விரிவுரையாளர்கள் வார இறுதி நாட்களில்தான் எமது பல்கலைக்கழகத்துக்கு வருகை தருவதற்குரிய நேர அட்டவணையினைக் கொண்டுள்ளனர். இதனால், எமது பொறியியல் பீட மாணவர்களுக்கான வகுப்புக்களை வார இறுதி நாட்களிலும் நடத்த வேண்டியுள்ளது.

இந்த நிலையில், இதனையும் மாணவர்கள் ஒரு பிரச்சினையாகக் கூறிக் கொள்கின்றனர். தமக்கு வார இறுதி நாட்களில் அதிகமான வகுப்புக்கள் நடைபெறுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டு எந்த விதத்திலும் நியாயமில்லை’ என்றார்.

இதேவேளை, மாணவர்களின் இந்த நடவடிக்கையின் பின்னால் ‘சில தூண்டல்கள்’ உள்ளதாகவும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி கூறினார்.

‘இந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்காகவா இவ்வாறான பின்தூண்டல்கள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று இதன்போது, நமது ஊடகவியலாளர் கேட்டபோது, ‘இருக்கலாம்’ என்று, பீடாதிபதி பதிலளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்