
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்னவிடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டி ஆகியோர் தலா 01 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகைகளை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
முறைப்பாட்டாளர் சார்பாக ஆஜரான சிரேஸ்ட அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேரா, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான மற்றொரு வழக்கு ஜூலை 11 ஆம் தேதி கொழும்பு மேல் நீதிமன்றம் இலக்கம் 01இல் விசாரணைக்கு வரவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த வழக்கிலும் தற்போதைய வழக்கிலும் உள்ள ஆவணங்கள் ஒத்தவை என்று அரச சட்டத்தரணி இதன்போது கூறினார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை ஓகஸ்ட் 04ஆம் திகதி மீண்டும் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
குறித்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டமா அதிபர், மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். மார்ச் 31, 2009 முதல் டிசம்பர் 12, 2013 வரை, சட்டவிரோதமாக சம்பாதித்த 59 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மூன்று தனியார் வங்கிகளில் நிலையான வைப்புத்தொகையாக வைப்புச் செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் ஒரு குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



