
– நூருல் ஹுதா உமர் –
ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில், குறித்த சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு இன்று(16) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் நடைபெற்றது.
17 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை கொண்ட ஏறாவூர் நகர சபையில், தவிசாளர் உப தவிசாளர் தெரிக்வுக்கான இன்றைய அமர்வில் 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை.
இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னைய நாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நளீம் முன்மொழிந்து வழிமொழியபட்டார்.
அதனைப் போன்று ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பர்லின் அவர்கள் முன்மொழித்து வழிமொழியப்பட்டார்.
இதன் பிரகாரம் தவிசாளர் தெரிவு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இதன்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட எம்.எஸ். நளீமுக்கு ஆதரவாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 07 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த 01 உறுப்பினரும், தமிழரசுக் கட்சியை சேர்ந்த 01 உறுப்பிருமாக – மொத்தமாக 09 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எம். எஸ். சமீமுக்கு (பர்லின்) ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 04 உறுப்பினர்களும், தமிம் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த 02 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 01 உறுப்பினரும் என 07 உறுப்பினர் வாக்களித்தனர்
இதன் பிரகாரம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எஸ்.எம். நளீம்02 மேலதிக வாக்குகளால் தவிசாரானார்.
கடந்த முறையும் ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக நளீம் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



