
ஈரான் – இஸ்ரேலுக்கு இடையிலான போர் நான்காவது நாளாகத் தொடரும் நிலையில், இன்று திங்கட்கிழமை அதிகாலை ஈரான் நடத்திய தாக்குதல்களில் ஆகக் குறைந்தது 05 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய ராணுவம் ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் குண்டுவீசித் தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் ஈரான நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதேவேளை, இஸ்ரேலின் ஹைஃபா துறைமுக நகரமும் தாக்குதலுக்குள்ளானது.
ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளது. இதில் 70 பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர். ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவரும் இரண்டு ஜெனரல்களும் கொல்லப்பட்டனர்.
ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும்போது, ஈரானின் தாக்குதல்களும் நிறுத்தப்படும் என்று, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலும் ஈரானும் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இருந்தபோதிலும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் எனவும் டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார்.



