
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 17 ஆம் தேதி லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடர்பாக ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட விசேட அறிக்கை தொடர்பில் ஆணைக்குழு விசாரிக்கவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க தனது அறிக்கையில்; பிரதமராக இருந்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலுடன், மாகாண சபை நிதியை நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பதைத் தடைசெய்து – திறைசேரி செயலாளர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டதாக குறிப்பிட்டிருந்தார். நிதியாண்டுக்குள் நிதி செலவிடப்பட வேண்டும் அல்லது திறைசேரிக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.
அப்போது ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மற்றும் பிற மாகாண சபை தலைவர்களுக்கு இந்த முடிவு குறித்து அறிவிக்கப்பட்டதாகவும், இதனால் அத்தகைய வைப்புத்தொகைகள் திரும்பப் பெறப்பட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சமீபத்திய சட்ட நடவடிக்கைகள் அரசியல் நோக்கம் கொண்டவையா என்றும் அந்த அறிக்கையில் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்படுகிறதா என்பது குறித்தும் ரணில் விக்கிரமசிங்க கவலை தெரிவித்திருந்ததோடு, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.



