
முஸ்லிம் மக்களளை இலக்கு வைத்து தோல்வியடைந்த அணிகள் போலிப் பிரசாரங்களை மேற்கொள்கின்றன என்றும், அதன் பின்னணியில் பெரும்பாலும் ‘மரம்’ உள்ளது என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
‘மரம்’ என்பது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது.
”முஸ்லிம் மக்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கணக்கெடுப்பதில்லை என்றும், முஸ்லிம் மக்களைப் பார்ப்பதில்லை என்றும் சொல்கின்றனர். ‘வட்ஸாப்’ குழுக்களில் போகும் விடயங்கள் எனக்குத் தெரியும். ‘வட்ஸாப்’ குழுக்களிலோ, சமூக ஊடகங்களிலோ அவ்வாறான பதிவுகள் இடப்பட்டால், அதனை யார் இட்டனர் என பாருங்கள். அவ்வாறான எல்லா பதிவுகளின் பின்னாலும் ஒரு சிலர் உள்ளனர். அதில் அதிகம் பின்னணியில் ‘மரம்’ உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இன்று (12) காலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; பலஸ்தீனத்தில் நடைபெறும் விடயங்களை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.
“எப்போதும் பலஸ்தீன விடுதலை தொடர்பாக பேசுகின்ற இயக்கமாக நாம் உள்ளோம். பலஸ்தீன விவகாரம் தொடர்பில் எதிர்ப்பினை வெளியிடவும், ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் மக்களுக்கு உரிமை உள்ளது. நாங்கள் அந்த உரிமையில் கை வைக்கப் போவதில்லை. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாங்கள் அதில் கை வைக்கவோ, தடை விதிக்கவோ இல்லை.
ஆனால், பலஸ்தீன விடயம் தொடர்பில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டமை வேறு விடயம். அவர் சுயரீதியான தாக்கத்துக்கு உட்பட்டிருந்தார். அவரின் பெற்றோருக்கு நாங்கள் அதனைக் காண்பித்தோம். அவர்களின் பிள்ளையைக் காப்பாற்றிமைக்காக அவரின் பெற்றோர் எமக்கு நன்றி தெரிவித்தனர். அந்த வகையில்தான் நாம் அவரைக் கைது செய்தோம். அந்தக் கைது முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து செய்யப்பட்ட ஒரு விடயமல்ல.
நாட்டின் பாதுகாப்புக்காகவும், மக்களின் பாதுகாப்புக்காகவும் அடிப்படைவாதத்திலிருந்து இளைஞர்களைக் காப்பாற்றுவதற்காகவும் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம். அது பிழையா?
‘சுப்பர் முஸ்லிம்’ என்ற பெயரில் சில அடிப்படைவாத விடயங்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் உருவாகிக் கொண்டிருக்கிறது எனும் அறிக்கைகள் எமக்கு கிடைத்துள்ளன. அது பொதுவான முஸ்லிம் மக்களுக்கு விருப்பமான விடயமா? அது உங்கள் மார்க்கத்துக்கும் கலாசாரத்துக்கும் சாதகமானதா? நபிகள் நாயகம் ஒருபோதும் எங்கும் சொல்லாத விடயங்களை வைத்துக் கொண்டு விகாரமான அடிப்படைவாத விடயங்களில் ஈடுபடுகின்றனர். அது பிரச்சினைக்குரிய விடயம்தானே? அதற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்தானே. அதனை நாம் செய்கிறோம். அனைத்து மக்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் செயற்படும் அரசாங்கம் இதுவாகும்.
தொங்குவதற்கு எதுவித கொடியும் இல்லாது விட்டால், சொல்வதற்கு ஒன்றும் இல்லாது விட்டால், அதனை வைத்துக் கொண்டு சத்தமிடுவார்கள். ஆனாலும் இந்த நாட்டின் பொதுவான முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் உள்ளனர்” என, ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.



