
– அஹமட் –
யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், முஸ்லிம்கள் குறித்து தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை கூறிவருகின்ற போதிலும், இது தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் -நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பதிலளிக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
நாடாளுமன்றத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி உரையாற்றிய அர்ச்சுனா ராமநாதன், ‘முஸ்லிம்கள் ஓர் இனம் அல்ல’ என்றும், ‘அவர்களும் தமிழர்கள்தான்’ எனவும் தெரிவித்திருந்தார். (குறித்த உரையை இந்த link இல் காணலாம்). ஆனால் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு – பதிலளிக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக நேற்று (08) நாடாளுமன்றில் உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி, இலங்கையில் வழக்கிலுள்ள இஸ்லாமிய விவாக, விவாகரத்து தனியார் சட்டம் தொடர்பில் பிழையானதும், முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் வகையிலானதுமான விடயங்களைக் கூறியிருந்தார்.
அதாவது, முஸ்லிம் ஆண் ஒருவர் ஒரே நாளில் விவாகரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், ஆனால் பெண்களுக்கு அவ்வாறான சந்தர்ப்பம் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார் (அந்த உரையை இந்த link இல் காணலாம். ஆனால், அது தவறான தகவலாகும். முஸ்லிம் ஆண் ஒருவர் விவாகரத்துப் பெற்றுக் கொள்வதற்கு ஆகக்குறைந்தது 03 மாதங்கள் தேவைப்படும் (இது குறித்த தெளிவை பெறுவதற்கு இந்த செய்தியை காணவும்).
இந்த உரைக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர – எவரும் தங்கள் எதிர்ப்பை வெளியிடவில்லை.
அர்ச்சுனா எம்.பி நேற்று உரையாற்றிக் கொண்டிருந்த போது, இடைமறித்த பிரதியமைச்சர் முனீர் முளப்பர்; உங்களுக்குத் தெரிந்த விடயங்களைப் பேசுங்கள், தெரியாத விடயங்களைப் பேசாதீர்கள் எனும் அர்த்தப்பட கூறினார். இதற்கு ஆத்திரத்துடன் பதிலளித்த அர்ச்சுனா எம்.பி; “உனக்கு மூளை இல்லாது விட்டால் நான் எதுவும் செய்ய முடியாது” என்றார்.
மேலும், இலங்கையில் முஸ்லிம் பெண் பாலுறுப்பு சிதைப்பதற்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆதரவளிக்கிறது என்றும் அர்ச்சுனா எம்.பி தனது உரையில் குறிப்பிட்டார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு – இதுவரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பதிலிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரனுடன் ஏற்பட்ட பிரச்சினையினையடுத்து, அவருக்கு பேஸ்புக் நேரலையில் பதிலளித்த அர்ச்சுனா, ராமலிங்கம் சந்திரசேகரனின் மலையக தமிழர் சமூகத்தை ‘கப்பலில் வந்த அடிமைகள்’ எனும் அர்த்தப்பட கூறியிருந்தார் (அது தொடர்பான பதிவை இந்த link இல் காணலாம்).
அர்ச்சுனா ராமநாதனின் தொடர்ச்சியான இந்த செயற்பாடுகளால், முஸ்லிம் – தமிழ் இனங்களுக்கிடையிலும், யாழ்ப்பாண – மலையக தமிழ் சமூகங்களுக்கிடையிலும் தேவையற்ற முரண்பாடுகளும், கசப்புக்களும், சிலவேளைகளில் மோதல்களும் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. அவ்வாறு நடக்க வேண்டும் என்பதற்காகவே, அர்ச்சுனா எம்.பி இவ்வாறு பேசி வருகிறாரா என்கிற சந்தேகங்களும் உள்ளன.
இவற்றுக்கு அப்பால், நேற்று நாடாளுமன்றில் பேசிய அர்ச்சுனா எம்.பி; அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரனை ‘கரடி’ என்றும் ‘விலங்கு’ என்றும் மிக மோசமாக கூறினார். முன்னொரு தடவை – அமைச்சரை ‘நாய்’ என்று குறிப்பிட்டார்.
ஒரு தடவை அர்ச்சுனா எம்.பி குறித்து நாடாளுமன்றில் பேசிய தயாசிறி ஜயசேகர; ”மனநல பரிசோதனைகக்கு அர்ச்சுனா எம்.பியை உட்படுத்த வேண்டும்” என்றார்.
தயவு செய்து, அந்தப் பரிசோதனை செய்வதற்கு நாடாளுமன்றம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என – இந்த நாட்டை நேசிக்கும் மக்கள் சார்பாகவும், இனங்களுக்கிடையில் நல்லுறவு நிலவ வேண்டும் என விரும்புகின்றவர்கள் சார்பிலும், நாடாளுமன்றத்தின் கௌரவத்தை மதிக்கும் பிரஜைகள் சார்பிலும் கேட்டுக் கொள்கிறோம்.



