தலைப்புச் செய்திகள்

இஸ்லாமிய சட்டம் குறித்த தெளிவில்லாமல், அர்ச்சுனா எம்.பி போன்ற ‘கண்ட கண்ட’ நபர்களெல்லாம் கதைக்கக் கூடாது: முபாரக் மௌலவி காட்டம்

முஸ்லிம் திருமண‌ மற்றும் விவாகரத்துச் ச‌ட்ட‌ம் ப‌ற்றி, நாடாளுமன்றத்தில் நேற்று (08) அர்ச்ச‌னா எம்.பி கூறிய விடயங்கள் ப‌டு முட்டாள்த‌ன‌மாது என்று, உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

”இஸ்லாமிய தனியார் சட்டத்தின் படி – ஓர் ஆண் விவாக‌ர‌த்து விரும்பினால் ஒரே நாளில் அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ஆனால் ஒரு பெண்ணுக்கு அவ்வாறு முடியாது, அர்ச்சுனா எம்.பி கூறியிருந்தார். அது தவறானது.

இஸ்லாமிய தனியார் சட்டத்தின் படி – விவாகரத்தை அவ்வாறு ஒரே நாளில் ஓர் ஆணுக்கு பெற‌ முடியாது என்ப‌து முஸ்லிம்க‌ளுக்கு தெரியும். எனவே, அர்ச்சுனா போன்ற கண்ட க‌ண்ட‌ நபர்கள் இது தொடர்பில் விவரம் தெரியாமல் பேசக்கூடாது” என, முபாரக் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தின் நோக்க‌ம் – த‌ம்ப‌திய‌ரை இணைப்ப‌தே த‌விர‌ பிரிப்ப‌த‌ல்ல‌ என்றும் முபாரக் மௌலவி சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஓர் ஆண் ஒரே நாளில் த‌லாக் (விவாகரத்து) சொல்ல‌ முடியாது. அதற்கு ஆகக் குறைந்தது மூன்று மாத‌ங்க‌ள் தேவை. ஒரு த‌ட‌வை தலாக் சொல்லி, பெண்ணின் மாத‌விடாய் முடிய வேண்டும். அதன் பிற‌கும் இன்னுமொரு தடவை தலாக் கூற வேண்டும். அதன் பின்னரும் ஒரு மாத‌ம் போக‌ வேண்டும். அத‌ன் பிறகுதான் விவாகரத்து வழங்க வேண்டுமா? இல்லையா? என்பதை காதி தீர்மானிப்பார்.

“அத்துட‌ன் இஸ்லாமி திருமண சட்டத்தில் பெண்ணின் திரும‌ண‌த்தை அவ‌ள் தீர்மானிக்க‌ முடியாது என்றும், அவ‌ள் த‌ந்தைதான் தீர்மானிக்கிறார் என்றும் அர்ச்சுனா தெரிவித்திருந்தார். அந்த முட்டாளிட‌ம் கேட்கிறேன்; உன் ம‌க‌ளின் திரும‌ண‌த்தை நீ தீர்மானிக்காம‌ல் அடுத்த‌ வீட்டுக்கார‌னா தீர்மானிப்பான்?”.

”இப்போதெல்லாம் நாட்டில் ம‌ற்ற‌ ச‌மூக‌ங்க‌ள் ம‌த்தியில் 10 வ‌ய‌து தாய்மார் அதிக‌ரித்த‌மைக்கான‌ காரண‌த்தை ஆராய்ந்து அத‌ற்கு தீர்வு தேடுங்க‌ள். 10 வ‌ய‌து தாய்மார் முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் இல்லை” எனவும் – மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா எம்.பியின் சர்ச்சைக்குரிய உரையை காணுங்கள்