
– மரைக்கார் –
”எனது தந்தையை 22 வருடங்களாக அரசியலில் எதிர்த்து கஷ்டப்படுத்தி – வஞ்சம் தீர்த்து விட்டு, அதன் தொடர்ச்சியாக என்னையும் அரசியலில் பழி தீர்க்க முயற்சிக்கிறீர்கள்” என்று, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையின் முகத்துக்கு நேரே, முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் புதல்வருமான றியா மசூர் ஆக்ரோசமாக தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களை – இன்று (09) ஒலுவில் ‘கிறீன் வில்லா’வில் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தலைமையிலான உயர் மட்டக்குழு சந்தித்தது. இதன்போது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் பிரதித் தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி யேர் ரஹ்மத் மன்சூர் உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த நிகழ்விலேயே நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி – றியா மசூர் மிகவும் ஆக்ரோசத்துடன் மேற்கண்டவாறு கூறினார்.
“எனது தந்தைக்கு எதிராக நீங்கள் மிகவும் மோசமாக அரசியல் செய்தீர்கள், அவரை கஷ்டப்படுத்தினீர்கள். எனது தந்தையை மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸையும் தேசிய காங்கிரஸில் இருந்து கொண்டு அழித்தீர்கள். இப்போது – எனது தந்தை மீது கொண்ட கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு – என்னையம் பழி தீர்க்க முயற்சிக்கிறீர்கள். அது ஒருபோதும் நடக்காது. உங்கள் நயவஞ்சகத்தனத்தை நான் எதிர்த்து நிற்பேன்” என்று, உதுமாலெப்பையை நோக்கி – றியா மசூர் குறிப்பிட்டார்.
அட்டாளைச்சேனையில் றியா மசூர் போட்டியிடுவதற்கு விருப்பம் கொண்டுள்ள வட்டாரத்தில், றியாவை தவிர்த்து – வேறு ஒருவரை வேட்பாளராக களமிறக்க நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியே, அவரை றியா மசூர் இவ்வாறு எதிர்த்துப் பேசினார்.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச மத்திய குழுத் தலைவர் எஸ்.எல்.ஏ. ஹலீமும் – நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையுடன் முறுகியதாகவும் தெரியவருகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீருடைய மருமகன் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், அவரின் பெயரையும் வேட்பாளர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வேண்டியோர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுமாறும் மத்திய குழுத் தலைவர் ஹலீம் கூறினார்.
இதன்போது குறுக்கிட்ட உதுமாலெப்பை எம்.பி; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நசீரின் மருமகன் – முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவரில்லை என்றும் அதனால் அவரின் பெயரை சேர்த்துக் கோள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
இதற்கு மத்திய குழுத் தலைவர் ஹலீம் தனது எதிர்ப்பை வெளியிட்டதோடு, தான் கூறிய நபர் முஸ்லிம் காங்கிரஸ்காரர் என்று உறுதிபடக் கூறினார். இதனால், அந்த நபரின் பெயரையும் பட்டியலில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன்போது அங்கு வந்திருந்த சிலரிடையே கைகலப்பு ஏற்படும் நிலையும் தோன்றியது. இறுதியாக இந்தப் பிரச்சினைகளை கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் எம்.பி தலையிட்டு தீர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.






