தலைப்புச் செய்திகள்

நிறுத்தாத கார் மீது துப்பாக்கிச் சூடு: கஞ்சாவுடன் வந்த தம்பதி சிக்கினர்

ஹோகந்தர பகுதியில் நேற்று (23) இரவு பொலிஸாரின் உத்தரவை மீறி வேகமாகச் சென்ற கார் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரியவருகிறது. இதனையடுத்து அந்த காரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

மாலபே பொலிஸார் காரை நிறுத்துமாறு சைகை செய்ததாகவும், ஆனால் சாரதி அதனை அலட்சியம் செய்து – வாகனத்தை பின்னால் ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காரின் டயரில் சுட்டதால், அது ஒரு மின்சார கம்பத்தில் மோதியது.

இதன் பின்னர் வாகனத்தை சோதனை செய்தபோது, ​​கார் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.8 கிலோ கிராம் கஞ்சாவை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

சந்தேக நபர்களின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து மேலும் 01 கிலோ கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்கொடவைச் சேர்ந்த 30 வயது ஆண் மற்றும் அவரின் 33 வயது மனைவி ஆகிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.