
அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு – எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (09) ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியம் (IMF) எந்த ஆட்சேபனையினையும் வெளியிடவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்; “நாங்கள் 25,000 ரூபாய் வழங்குவோம் என்று சொல்லவில்லை. சரியான தொகையைப் பற்றி பார்ப்போம். பீதி அடைய வேண்டாம். பைக்குள் என்ன இருக்கிறது என்பதைத் திறந்து பாருங்கள். செப்டம்பர் 04ஆம் திகதி தபால் வாக்கெடுப்புக்கு முன்பு, இந்த நாட்டிலுள்ள அரச ஊழியர்களின் வாக்குகளை குறிவைத்து – ரணில் விக்கிரமசிங்க ஒரு அமைச்சரவை முடிவை எடுத்தார்.
ஆனால் அரச ஊழியர்கள் நல்ல பதிலைக் கொடுத்தனர். இது அரச ஊழியர்களை ஏமாற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட ஒன்று. உண்மையானது அல்ல” என்றார்.



