
எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகள் வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று – பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை வந்த ரொஹிங்கியா அகதிகள் குழு தொடர்பில் இலங்கை பொலிஸ் மற்றும் ராணுவ புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் – இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் விஜேபால இன்று (08) நாடாளுமன்றத்தில் கூறினார்.
இலங்கையில் சட்ட விரோத குடியேற்றவாசிகளின் பிரச்சினையை சமூகப் பிரச்சினையாக – அரசாங்கம் அடையாளம் காணும் என அமைச்சர் விஜேபால வலியுறுத்தினார்
அண்மையில் மியன்மார் – ரோஹிங்கியா அகதிகள் 116 பேர், படகு மூலம் இலங்கைக்கு வந்ந்த சம்பவம் தொடர்பில் – பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“இந்த பயணத்திற்காக அந்தக் குழுவினர் சுமார் 50 மில்லியனை அவர்களின் நாணயத்தில் செலுத்தியுள்ளர். மனித கடத்தல்காரர்களுக்கு 80 மில்லியன் பணத்தையும் கொடுத்துள்ளனர். அகதிகளிடம் பொலிஸ் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
சட்டவிரோத குடியேற்றவாசிகள் அகதிகளாக இனங்காணப்பட்டால், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர், சர்வதேச சட்டங்களின்படி செயற்பட அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
“குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக – அகதிகள் குழுவினருக்கு உணவு மற்றும் தண்ணீர் உட்பட தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்கியுள்ளோம்” என்றும் – அவர் ரோஹிங்கியா அகதிகளின் தற்போதைய நிலை குறித்து நாடாளுமன்றில் விளக்கினார்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி முல்லைத்தீவு கடற்பகுதியில் மீட்கப்பட்ட, மியன்மாரில் இருந்து வந்த – ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.



