
பொலிஸ் நிலைய தடுப்புக் காவல் அறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் குழுவொன்றினருக்கு சூது விளையாட அனுமதியளித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனுராதபுரம் – கிரனேகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸார் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் – பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து – தலா 02 லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
பொலிஸ் நிலைய தடுப்புக் காவல் அறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள், இவ்வருடம் ஜூலை மாதம் மரண வீடொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்தப் பின்னணியில் சந்தேக நபர்கள் அதிக போதையில் இருந்த போது கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் தங்கும் அறைக்குள் இருந்தபோது எப்படியோ சூதாடத் தொடங்கி விட்டதாக பொலிஸ் பேச்சாளர் விபரித்தார்.



