தலைப்புச் செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; இரண்டு ராணுவ வீரர்கள் பலி: மீண்டும் பதிலடி வேண்டாம் என்கிறது இஸ்ரேல்

ஈரான் மீது இன்று (26) சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தமது ராணுவ வீரர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர் என, ஈரான் அறிவித்துள்ளது.

இஸ்ரேலை ஈரான் தாக்கியமைக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 01ஆம் திகதியன்று ஈரான் – சுமார் 200 ஏவுகணைகளைக் கொண்டு, இஸ்ரேலை சரமாரியாகத் தாக்தியது.

இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் – ஈரானின் தலைநகரின் மேற்கு மற்றும் தென்மேற்கில் உள்ள சில ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவலர்களுக்கு நெருக்கமான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளன.

சிரியாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள சில ராணுவ தளங்களையும் குறிவைத்து – இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சிரிய அரசின் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இஸ்ரேலின் போர் விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன. இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதலில் ஈடுபட்ட தமது விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இஸ்ரேலுக்குத் திரும்பியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இன்று காலை ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்களின் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக – ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்ரேலிய தாக்குதல்கள் வரையறுக்கப்பட்ட சேதத்தை ஏற்படுத்தியதாக ஈரான் ராணுவம் கூறியது.

ஈரானின் இலாம், குசெஸ்தான் மற்றும் தெஹ்ரான் மாகாணங்களில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து – இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அல் ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியொன்றில், ‘சுவாரஸ்யமான விவரம்’ எனத் தெரிவித்து தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, இஸ்ரேல் தாக்குவதற்கு முன்னர் வெள்ளிக்கிழமை ஈரானுக்கு இஸ்ரேல் ஒரு செய்தியை அனுப்பியுள்ளது. அதில் தமது தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

இந்தச் செய்தி எவ்வாறு வழங்கப்பட்டது அல்லது யார் அதை அனுப்பினார்கள் என்பதை அறிக்கைகள் குறிப்பிடவில்லை என்றும், செய்தி அனுப்பப்பட்டது என்பதை மட்டும் – பெயரிடப்படாத இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, ஈரானுக்கு எதிரான பதிலடி முடிந்துவிட்டதாகவும், ஈரானிடம் இருந்து மேலும் பதிலடியை தாங்கள் விரும்பவில்லை என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.