தலைப்புச் செய்திகள்

எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதாக நாம் கூறவில்லை: அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் மௌலவி நியாஸ் தெரிவிப்பு

– அஹமட் –

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு தரப்புக்கும் – ஓர் அமைப்பாக தாங்கள் ஆதரவு வழங்கவில்லை என்றும், எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை எனவும், அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் மௌலவி யூ.எல். நியாஸ் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை உலமா சபை – தனக்கு ஆதரவளிப்பதற்கு உறுதியளித்துள்ளதாக, வேட்பாளரொருவர் பகிரங்கமாக தெரிவித்து வருகின்றமை குறித்து, அந்த அமைப்பின் தலைவரிடம் கேட்டபோதே, அவர் இதனைக் கூறினார்.

” ஜம்இய்யத்துல் உலமா சபை – தேர்தலில் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிக்க முடியாது. மக்கள் அவர்களின் விருப்பத்துக்கேற்ப வாக்களிக்க முடியும். இவருக்கு அல்லது இந்த கட்சிக்குக்கு அல்லது சுயேட்சைக் குழுவுக்கு வாக்களியுங்கள் என்று, எந்தத் தரப்பையும் குறிப்பிட்டு உலமா சபை கூற முடியாது” எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

அண்மையில் அட்டாளைச்சேனையிலுள்ள உலமாக்களை சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்து, அங்குள்ள வேட்பாளர் ஒருவர் அழைப்பு விடுத்திருந்ததாகவும், நாகரீகம் கருதி, அவரை உலமாக்கள் சந்தித்ததாகவும், ஜம்இய்யத்துல் உலமா தலைவர் மௌலவி நியாஸ் மேலும் தெரிவித்தார்.