
கடந்த ஆட்சிக்காலத்தில் மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்று விநியோகம் செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேற்று (03) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சுமந்திரன், நாடு முழுவதும் மதுபானசாலைகள் பெருகுவது தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த மதுபான விற்பனை நிலையங்களை திறக்க பரிந்துரை செய்வதற்கு பொறுப்பான நபர்களின் பட்டியலை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“நாடு முழுவதும் மதுபானக் கடைகளில் ஒரு பரவலான பிரச்சினை உள்ளது. இந்த உரிமங்களுக்கு எந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல்வாதிகள் ஒப்புதல் பரிந்துறை செய்தனர் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளத் தகுதியானவர்கள். இது எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்காலத்தில் பதவியில் இருந்து விலக்கப்படுவார்கள்” எனவும் சுமந்திரன் கூறினார்.
மதுபான விற்பனை நிலையங்களின் அதிகரிப்பானது இளைய தலைமுறையினருக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க சமூகப் பிரச்சினையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். மதுபானக்கடைகளை விஸ்தரிப்பதற்கு ரகசியமாக உதவிய அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பணம் பெறுவதற்காக மதுபான அனுமதிப்பத்திரங்களை விற்று சிலர் லாபம் ஈட்டியதாக தகவல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
“இந்த நபர்களின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். லாபம் பெறுவதற்காக அவர்கள் அனுமதிகளை விற்றதாக நாங்கள் கேள்விப்படுகின்றோம்”
குறிப்பாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகப்படியான பலன்களைக் குறைப்பதற்கு எங்களின் முழு ஆதரவும் இருக்கும். பொருளாதார நெருக்கடியான நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்தகைய சலுகைகளை அனுபவிப்பது பொருத்தமற்றது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.



