ரணிலுக்கு ஆதரவளித்த முன்னாள் எம்.பிகள் யானைச் சின்னத்தில் போட்டி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யானை சின்னத்தில் அல்லது வேறு ஒரு சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘காஸ் சிலிண்டர்’ சின்னத்தை பெற்றுக்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
எதிர்வரும் தேர்தலில் தாங்கள் போட்டியிடும் சின்னம் மற்றும் கூட்டணி தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (02) கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள – முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் கூடினர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ‘காஸ் சிலிண்டர்’ சின்னத்தை பெற முடியாவிட்டால், அவர்கள் பெரும்பாலும் ‘யானை’ சின்னத்தில் அல்லது வேறு பொதுவான சின்னத்தில் போட்டியிடுவார்கள் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.