தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் 700 பேர் நாட்டில் இல்லை: 20 பேர் மரணம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 700 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ​வேட்புமனு தாக்கல் செய்த ஏறக்குறைய 20 வேட்பாளர்கள் தற்போது உயிருடன் இல்லை எனவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட 500 வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரங்களை கண்டறியும் விசேட நடவடிக்கை – எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.
ரத்நாயக்க கூறியுள்ளார்.

மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர், வேட்பாளர்கள் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு மாவட்டச் செயலகங்கள் மற்றும் அந்தந்த அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு – தேர்தல் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலைமைகள் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,711 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வேட்புமனுக்கள் கோரப்பட்ட அதேவேளை – அதற்காக 80,672 பேர் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.