தலைப்புச் செய்திகள்

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு – ஜனாதிபதிக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஆர்.எஸ்.பி. ரணசூரிய – இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கும் செயற்படுவதற்கும் தடை விதித்து – கடந்த ஜூலை 24ஆம் திகதி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக, கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களை தொடர்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ள இடைக்கால உத்தரவின் போது, ​​பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனாலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் – இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பதில் பொலிஸ் மா அதிபரை தான் நியமித்தால், தான் தேர்தல் சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கு வழிவகுக்கும் என – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவரின் சட்டத்தரணி ஆலோசனை வழங்கியுள்ளதாக பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த விடயத்தில் தலையிடுவதை தவிர்க்குமாறு நாடாளுமன்ற சபாநாயகருக்கு ஜனாதிபதி அறிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து, மறுநாள் நாடாளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்திய பிரதமர் தினேஸ் குணவர்தன, பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ஜனாதிபதியிடம் தற்போது இல்லை என்றார்.

மேலும், பொலிஸ் மா அதிபரின் பதவி தற்போதைக்கு வெற்றிடமாகவில்லை என்றும் பிரதமர் அதன்போது கூறினார்.

தற்போதைய பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை வழங்கிய அனுமதியை மாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.