தலைப்புச் செய்திகள்

வரி உயர்வு காரணமாக கசிப்பு பாவனை 30 வீதமாக அதிகரிப்பு

வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, சட்டவிரோத மதுபான நுகர்வு, குறிப்பாக ‘கசிப்பு’ பாவனை 19% இலிருந்து 30% ஆக அதிகரித்துள்ளது என, கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.

வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, சட்டவிரோத மதுபானங்கள் சந்தைக்கு வந்ததுள்ளமையுடன், மதுபானத்தின் விலையும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

அரசின் வருவாய் ஈட்டும் மூன்றாவது முக்கிய துறையாக, கலால் துறை உள்ளது. 2024க்கான வரவு – செலவு திட்ட முன்மொழிவின்படி, இந்த ஆண்டு 232 பில்லியன் ரூபாயை வருவாயாக ஈட்ட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தினால் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சில மாவட்டங்களில் மதுபானங்களுக்கு அரசால் அனுமதி வழங்கப்படாதது ஆச்சரியமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட மதுக்கடையை தேடி மக்கள் குறைந்தபட்சம் 30 முதல் 40 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டியுள்ளது. ஆனாலும், சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் இந்தப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் இன்றி தொடர்ந்து செயல்படுகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வருடம் ஜூலை 31க்குள 122 பில்லியன் ரூபாயை வருவாயாக அரசு பெற்றுள்ளது. மேலும் இலக்கை அடைய 110 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு மதுபான கடைக்கான உரிமம் வழங்குவதன் மூலம் 2,000 மில்லியன் ரூபாயை வசூலிக்க அரசு தீர்மானித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை 1,750 மில்லியன் ரூபாய் மதுபான கடை உரிமம் வழங்குவதன் மூலம் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது.