வேட்புமனுவில் நாமல் கையொப்பமிட்ட நிகழ்வில் சமல் இல்லை; கோட்டா ஆஜர்
🕔 August 14, 2024
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, இன்று (14) தனது வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, சிராந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட நாமல் ராஜபக்ஷவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
ஆயினும், மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் நாடாளுமுன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ – இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.
நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றமை தொடர்பில் சமல் ராஜபக்ஷவுக்கு உடன்பாடு இல்லை என்றும், அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.