
பூஜ்ஜியமாகக் குறைந்து போயிருந்த நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு இன்று 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகினாலும், பொருளாதார வளர்ச்சி மறைப் பெறுமானம் 08ஆக பதிவாகிய வங்குரோத்து நாட்டில் – வறுமை புதிதல்ல என அவர் கூறினார்.
ஆனாலும் வறிய மக்களின் பாதுகாப்புக்கான நிவாரணமாகவே சமூர்த்தி போன்ற மூன்று மடங்கு நிவாரணத் தொகையை வழங்கும் அஸ்வெசும வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், ஒப்பந்ததாரர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை செலுத்த வேண்டியிருந்த நிலுவைத் தொகையில் 361 பில்லியன் ரூபாவை செலுத்தி முடித்திருப்பதாகவும் இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் – அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பிக்க முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்;
“கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலான பணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதன் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெறுவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது. பின்னர் கடன் மறுசீரமைப்பு குறித்தும் ஆராயப்பட்டது. அதனால் தற்போது நாடு சுமூகமான பொருளாதார நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை விருப்பமின்றியேனும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அந்த நேரத்தில் டொலரின் பெறுமதி 400 ரூபாவிற்கு கிட்டியதாக காணப்பட்டது. ஆனால் இன்றளவில் டொலரின் பெறுமதி 300 ரூபாவை விடவும் குறைந்துள்ளது. அதனால் இறக்குமதிப் பொருட்களுக்கான கொடுப்பனவுகளும் குறைவடைந்திருக்கிறது.
மேலும், வட்டி விகிதம் குறைந்துள்ளது. 70% ஆக இருந்த பணவீக்கம் 6% ஆக குறைந்துள்ளது. அதனால் பொருட்களின் விலை உயர்வு விகிதமும் குறைந்துள்ளது. இதன் காரணமாக நாடு பாதகமான நிலையிலிருந்து மீண்டுள்ளது என்றே கூற வேண்டும்.
தற்போதைய புதிய மத்திய வங்கிச் சட்டத்தின்படி, எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், பணம் அச்சிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதன் ஊடாக நிதி நிர்வாகத்தில் ஒழுக்கத்தைப் பேண முடிந்துள்ளது.
இவ்வாறான நிதி ஒழுக்கத்தை பேணுவதாக சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூன் மாதத்திற்குள், இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான இறுதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும். அதன் பிறகு, தடைபட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படும்” என்றார்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)



