முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமைக்கு, அரசாங்கம் மன்னிப்புக் கோருவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு: ஜீவன்

🕔 April 3, 2024

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் கொவிட் தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்தமைக்காக – நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஹட்டன் நகரில் நேற்று (02) அமைச்சர் தொண்டமான் நடத்திய இப்தார் நிகழ்வில் உரையாற்றிய போது, கட்டாய தகனத்தினால் முஸ்லிம் சமூகம் மத்தியில் ஏற்பட்ட கவலையை அவர் ஒப்புக் கொண்டார்.

வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கையினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மன வருத்தங்களுக்கு, அரசாங்கம் முறையான மன்னிப்புக் கோருவதற்காக, ஆய்வின் முடிவுகளுடன் அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

கொவிட்டினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வது நிலத்தடி நீரைப் பாதிக்கும் எனும் கவலையினால் உந்தப்பட்டமையின் காரணமாகவே, கோட்டா அரசாங்கத்தில் கட்டாய தகனம் அமுல்படுத்தப்பட்டதாகவும், ஆனால் உலக சுகாதார அமைப்பு மற்றும் அறிவியல் அறிவிக்கைகள் அதனை மறுத்திருந்தாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் தலைமையிலான ஆய்வின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நீர் தொழில்நுட்பத்திற்கான கூட்டு ஆராய்ச்சி மற்றும் விளக்க மையத்தின் (JRDC) புதுப்பித்தலின் மூலம் – முந்தைய அரசாங்கத்தின் நிலைப்பாடு இப்போது சவாலுக்குட்படுத்தப்பட்டு மறுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்