சுற்றுலாத் தலங்களாக 49 இடங்களை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் டயானா தெரிவிப்பு

🕔 April 29, 2024

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையில் இடம்பெறும் மோசடிகளையும், ஊழல்களையும் தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தனியான குழுவொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்;

“இந்நாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு நடக்கும் தொல்லைகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கின்றன. நான் இது குறித்து குரல் எழுப்பி வருகின்றேன். சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், சுற்றுலாத் தலங்களுக்கு செல்லக் கூடிய ரயில் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் குறிப்பாக இலங்கை தொடர்பில் பிரபல்யப்படுத்தி பிரச்சார வீடியோக்களை ஒளிபரப்பி வருகின்ற ஒரு சுற்றுலாப் பயணியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இவ்வாறு ஒரு சிலரால் நமது நாட்டின் நற்பெயருக்கு பங்கம் ஏற்பட வழிவிடக்கூடாது. அதிக விலைக்கு ரயில் டிக்கெட் விற்பனை செய்தல் தொடர்பில் குறிப்பிடுவதாயின் அவை பெரும்பாலும் ஊழல் மிக்க அதிகாரிகளின் ஆதரவுடனேயே இடம்பெறுகின்றன. இவற்றைத் தடுப்பதற்காகவே ஒன்லைன் முறையில் டிக்கெட் கொள்வனவு செய்வதை முறைமைப்படுத்தி வருகின்றோம். இம்முறையை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதன் மூலம் இவ்வாறான ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

அதேபோன்று, சட்டவிரோத மது விற்பனையால் எமது நாட்டுக்கு கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான வரி வருமானம் இழக்கப்படுகின்றது. எமது நாடு பௌத்த நாடு என்ற படியால் நாம் பௌத்த மதத்திற்கு செய்யும் கௌரவமாக – போயா தினத்தில் இந்நாட்டில் மது விற்பனை நிலையங்கள் மூடப்படுகின்றன.

ஆனால், அவ்வாறான தினங்களிலும் எமது நாட்டு மக்களே சட்ட விரோதமாக மது விற்பனை செய்கின்றனர். அவற்றைத் தடுக்கச் செல்லும் அதிகாரிகளும் லஞ்சம் போன்ற ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அதனால்ட அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் திரும்பி வருகின்றனர். இவ்வாறு ஒரு சிலர் செய்யும் ஊழல் மேசடிகளால் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்த முடியாமல் உள்ளது.

இவ்வாறான மோசடிகளைத் தடுக்கவும் கண்காணிக்கவும் தனியான குழுவென்றை நியமிக்க நான் பரிந்தரைத்துள்ளேன்.

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளோம். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிடவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதன் ஊடாக எமது நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்நாட்டில் இயங்கும் SPA மையங்கள் தொடர்பில் அண்மைக் காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவை உண்மையில் ஏனைய நாடுகளில் ஆரோக்கிய மையங்களாகவே இயங்குகின்றன. மக்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகின்றவையாக அவை இருக்க வேண்டும்.

ஆனால் இந்நாட்டில் அவ்வாறான இடங்களில் இடம்பெறுபவை பற்றி நான் குறிப்பிடத் தேவையில்லை. எனவே இந்நாட்டு மக்களின் சுகாதாரம், ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்தி அவற்றை முறைப்படுத்தி – கண்காணிப்பு பொறிமுறைகளை உருவாக்க சுகாதார அமைச்சுடன் நாம் கலந்துரையாடி வருகின்றோம்.

பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் – பொது மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் குறித்து இப்போதைய நிலையை விடவும் அதிகமாக மக்களுக்கு தெளிவூட்டல்கள் இடம்பெறவேண்டும்” என்றார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்