மொட்டுக் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளர் இல்லை: அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு

🕔 May 16, 2024

ட்சியை விடவும் தற்போதைக்கு நாடு முக்கியம் எனவும் அதனால் தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என – தான் ஆலோசனை வழங்குவதாகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தற்போது பொருத்தமற்றது எனவும் அவர் கூறினார்.

நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நிலையான அரசாங்கம் அமைய வேண்டும் எனவும் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலின் மூலம் நிலையான அரசாங்கம் உருவாகாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் – பொதுத் தேர்தலை நடத்துவதன் மூலம், நாட்டில் மீண்டும் ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்க முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

பொதுஜன பெரமுனவின் மீரிகம தொகுதி உறுப்பினர்களுக்கு கட்சியை வலுப்படுத்துவது மற்றும் எதிர்வரும் அரசியல் செயற்பாடுகள் குறித்து அறிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று (15) கலந்து கொண்டு – உரையாற்றும் போது, அவர் இந்த விடயங்களைக் கூறினார்.

தான் ரணிலின் ரசிகன் அல்ல எனக் குறிப்பிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் இணையப் போவதில்லை என்றும் கம்பஹா மாவட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப் போவதில்லை என்றும் உறுதியளித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“ஜனாதிபதித் தேர்தலுக்கு மொட்டுக் கட்சியில் (பொதுஜன பெரமுன) வேட்பாளர் இல்லை என்பதால், இந்த நேரத்தில் சவால்களை ஏற்றுக்கொண்ட தலைவரை, சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று நான் அறிக்கை வெளியிட்டேன். 2022,இல் நமது ஜனாதிபதியும் பிரதமரும் ராஜினாமா செய்தனர். அதன் பின்னர் இதனைத் தொடர்ந்து கொண்டு செல்ல எங்களுக்கு உதவுமாறு பலரை அழைத்தோம். யாரும் உதவுவதற்கு முன் வரவில்லை. யாரும் ஏற்கவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார்.

நாட்டைப் பற்றி யோசித்து, ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவ முடிவு செய்தேன். அது எனது தனிப்பட்ட கருத்து.

நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. பெரும்பான்மை பெற முடியாவிட்டால் என்ன நடக்கும்? கரு ஜயசூரியவுடன் ஒரு குழு நாடாளுமன்ற அதிகாரத்தை பலப்படுத்தியதால் – போரில் மகிந்த வெற்றி பெற்றார். பெரும்பான்மை இல்லாமல் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது. ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக வேலை செய்கிறார் என்பதற்காக மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் உள்ளனர். அவர் ஒரு பொதுவான அடையாளத்துடனும் பொதுவான கூட்டணியுடனும் வர வேண்டும்.

இன்று நான் ரணிலின் ரசிகனாக மாறிவிட்டேன் என்றும் – நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்லப் போவதாக சிலர் கூறுகின்றனர். நம்மிடையே இருப்பவர்களே அப்படிச் சொல்கிறார்கள், வெளியாட்கள் அல்ல. கம்பஹா மாவட்ட மக்களுக்கு அநீதி இழைக்கும் முடிவை நான் ஒருபோதும் எடுக்க மாட்டேன். மக்களைப் பற்றி சிந்தித்து முடிவுகளை எடுக்கிறேன். கட்சிகள் வரும் – போகும். அரசியல் செய்தால் வெற்றியும் தோல்வியும் ஏற்படும். ஒரு நாடு சிதைந்தால் அதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்