அனுரவை ஆதரிக்கும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகுவதாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அறிவிப்பு

🕔 September 6, 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகுவதாக, அந்தக் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினரும் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் – அறிவித்துள்ளார்.

கல்முனையில் அவர் இன்று (06) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த தகவலை வெளியிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவை ஆதரிக்கும் பொருட்டு, அவர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக நடந்து கொண்ட போதும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படாமை மற்றும் கட்சியின் உள்ளகக் குறைபாடுகள் ஆகியவற்றில் அதிருப்தி கொண்ட நிலையில், கட்சி நடவடிக்கைகளிலிருந்து – தான் விலகியிருந்ததாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

ஆனால் அனுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கும் – கட்சியுடனான அதிருப்திக்கும் இடையில் எந்தவிதத் தொடர்புகளும் இல்லை என்றும் ஆரிப் சம்சுதீன் இதன்போது குறிப்பிட்டார்.

அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து முஸ்லிம் காங்கிரஸில் இணைந்த ஆரிப் சம்சுதீன் – மு.காங்கிரஸின் உள்ளக நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்ட நிலையில், கட்சியுடனான உறவிலிருந்து விலகியிருந்தார். இந்த நிலையிலேயே அனுர குமார திசாநாயக்கவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ், அவருக்கான பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்