ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 223 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் பிரசன்ன தகவல்

🕔 April 29, 2024

– முனீரா அபூபக்கர் –

ஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும் 11 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

223 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக – அரசாங்கம் 139 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளது. காணியுடன் கூடிய புதிய வீடு கட்டுதல், வீடுகளை புனரமைப்பு செய்தல் போன்ற பணிகள் இதன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், கம்பஹா – கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் அதிகளவான குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. கட்டுவாபிட்டிய தேவாலயத்துடன் தொடர்புடைய 144 குடும்பங்களுக்கு இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வீடமைப்பு திட்டத்துக்காக மாத்திரம் 90.855 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் போது கொச்சிக்கடை தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட 09 குடும்பங்களுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கும் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ள.

இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 11 வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 05 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும். வீடமைப்புத் திட்டத்தை விரைவாக முடிக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, ஈஸ்டர் தினத்தன்று தாக்குதலுக்கு உள்ளான கட்டுவாப்பிட்டி தேவாலயத்துக்கு – அரசாங்கம் புதிய ஞாயிறு அறநெறிப் பாடசாலை கட்டிடத்தையும் நிர்மாணித்துள்ளது. புத்த சாசன, மத மற்றும் கலாசார அமைச்சினால் இதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக செலவிடப்பட்ட தொகை 13 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். 14 வகுப்பறைகளைக் கொண்ட இந்த ஞாயிறு அறநெறிப் பாடசாலைக் கட்டிடம் 02 மாடிகளைக் கொண்டது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு இதன் நிர்மாணப் பணிகளை பொறுப்பேற்றதுடன், கடந்த ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி இக்கட்டடத்தை தேவாலயத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்