பலஸ்தீனம் மீதான இஸ்ரேலிய தாக்குதலை, ஹிட்லரின் அட்டூழியங்களுடன் ஒப்பிட்டு சஜித் பிரேமதாச உரை

🕔 May 14, 2024

லஸ்தீனம் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு ஒப்பிட்டு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) நாடாளுமன்றில் பேசியுள்ளார்.

பலஸ்தீனர்களின் உரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று நடைபெற்ற போது, பலஸ்தீனக் கொடியைக் கொண்ட சால்வையினை கழுத்தில் அணிந்தவாறு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார்.

யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் செய்த அட்டூழியங்களை நினைவுபடுத்தும் நடவடிக்கைகளில் – இஸ்ரேல் ஈடுபட்டுள்ள நிலையில், பலஸ்தீன மக்கள் தற்போது கடுமையான பயங்கரவாதத்தை சகித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பலஸ்தீனத்துடன் ஒற்றுமையுடன் நின்று, இந்த தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீன நிலங்களைக் கைப்பற்றி புதிய குடியேற்றங்களை நிறுவி, காஸாவின் மக்களை அழிக்க முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார்.

இந்த வகையான பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டித்த சஜித் பிரேமதாச, உலகளாவிய எதிர்ப்பையும் மீறி – இது நடத்தப்படுவதாகக் கூறியதோடு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசாங்கம் – அதன் தீவிரவாத நிலைப்பாடு மற்றும் பயங்கரவாதச் செயல்களை நிறுத்தத் தவறிவிட்டது என்றும் விமர்சித்தார்.

கடந்த வருடம் ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 35,173 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 79,061 பேர் காயமடைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்