ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களின் நிலை குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

🕔 May 14, 2024

த்திவைக்கப்பட்ட 2023ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் – செல்லுபடியற்றதா என ஆராயுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனையைப் பெறுமாறு, பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளதாக, இன்று (14) காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வது தொடர்பில், ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுமாறு, பிரதமருக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பந்துல குணவர்த்தன மேலும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்கள் தமது வேலைகளில் ஈடுபடுவதிலும் ஏனைய நடவடிக்கைகளின் போதும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருப்பதைக் கருத்தில் கொண்டு – இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் வருடத்திற்குள் நடத்துவதற்கு சட்டமா அதிபர், தேர்தல் ஆணையாளர் மற்றும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு – பிரதமருக்கு அறிவுறுத்தப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்ததுடன், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கி முன்னைய முறைமையிலேயே இந்தத் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்