பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவித்தல் கடிதம் அனுப்பி வைப்பு

🕔 March 28, 2023

லங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட காரணங்கள் குறித்த கடிதம் – அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கும் பதில் கடிதம், நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சருக்கு இன்று அனுப்பப்படும் என்றும் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனக்க ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனவரி மாதம் குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட்டிருந்தது.

ஜனக்க ரத்நாயக்க ஒருதலைப்பட்சமான தீர்மானங்களை எடுத்ததாகவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்துரையாடவில்லை எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியிருந்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெயரைப் பயன்படுத்தி அதன் தலைவர் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுப்பதாகவும் அமைச்சர் கஞ்சன குறிப்பிட்டிருந்தார்.

ஜனக்க ரத்நாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் குற்றப்பத்திரிகையை ஆதரித்துள்ளதாகவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கான நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கான செயல்முறை பின்பற்றப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றப்பத்திரிக்கையை எதிர்கொள்ளத் தயார் என ஜனக்க ரத்நாயக்க பதிலளித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்