ராணுவ நிகழ்வில் கோட்டா ஆற்றிய உரை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: கலாநிதி தயான் ஜயதிலக

🕔 October 17, 2021

ராணுவ நிகழ்வொன்றில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றியமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

ராணுவத்தினது 72ஆவது ஆண்டுவிழாவில் சாலியபுர ராணுவ முகாமில் கஜபா ரெஜிமெண்ட் படைப்பிரிவின் விழாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பு பற்றி தெரிவித்த கருத்துக்கள் பலத்த சந்கேங்களை ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும், தேர்தல் முறைமை மாற்றப்படும் என்பன உள்ளிட்ட விடயங்கள் பற்றி கருத்து வெளியிட்டிருந்தார். 

ராணுவத்தின் ஆண்டு நிறைவு நிகழ்வொன்றில் இவ்விதமான கருத்துக்களை வெளியிட வேண்டியதன் அவசியம் என்னவென்று தயான் ஜயத்திலக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ராணுவ நிகழ்வில் இவ்விதமான கருத்துக்களை வெளியிட்டுள்ளதன் மூலம், 13ஆவது திருத்தச்சட்டத்தினை தற்போதுள்ளவாறு அமுலாக்க முடியாது, அதன் கீழ் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது என்பதை மறைமுகமாக ஜனாதிபதி கோட்டாபய வெளிப்படுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 20ஆவது திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்று அதிகாரங்களை கையில் வைத்திருக்கும் ஜனாதிபதி கோட்டபாயவுக்கு புதிய அரசியலமைப்புக்கான அவசியம் என்ன என்ற கேள்விகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, புதிய அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வினை கொண்டிருக்கமா என்பது பற்றி நம்பிக்கை கொள்ள முடியாது என்று குறிப்பிடும் தயான் ஜயதிலக்க, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாடு பல்லின இலங்கைக்கு பொருத்தமற்றதாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் புதிய அரசியலமைப்புக்கான கூற்றானது 13ஆவது திருத்தச்சட்டத்தினை இல்லாது செய்வதற்னான செயற்பாட்டை, இந்தியாவில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கயமையை முன்வைத்து தர்க்க ரீதியான நியாயங்களை வெளிப்படுத்துவதற்கு முனைவதாக கூட இருக்கலாம் எனவும் கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

Comments