தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்: மக்களை ஒன்று திரட்டி நிவாரணப் பொருட்கள் விநியோகம்

🕔 December 12, 2020

– அஹமட் –

னிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில், பெருமளவான பொதுமக்களை ஒரே இடத்தில் ஒன்று திரட்டி, அரசு வழங்கும் நிவாரணப் பொருட்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் விநியோகித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

கொரோனா பரவுதல் காரணமாக கடந்த 16 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குமாறு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த நிதியில் பெறப்பட்ட நிவாரணப் பொருட்களை மக்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்காமல், பெருமளவான பொதுமக்களை ஒரே இடத்துக்கு அழைத்து, அவர்களுக்கான நிவாரணப் பொருட்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் விநியோகித்து வருகின்றது.

இதன் காரணமாக கொரோனா பரவும் அபாயம் மிகவும் அதிகமாக ஏற்பட்டுள்ளதாக சமூக அக்கறையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், 16 நாட்களாக வீடுகளை விட்டும் மக்களை வெளியேறாமல் – தனிமைப்படுத்தியிருந்தமைக்கு அர்த்தமில்லாமல் போய் விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை இவ்வாறு மக்களின் நலனில் அக்கறையின்றி செயற்படும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரின் பொறுப்பற்ற நடவடிக்கை தொடர்பிலும் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பரவுதல் காரணமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழுள்ள அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகள் கடந்த 26ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேற்படி பகுதிகளுக்கு பிரதேச செயலகங்கள் மூலம், நிவாரணப் பொருட்கள்அரச நிதியில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கீழுள்ள தீகவாபி, ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளிலுள்ள 9107 குடும்பங்களுக்கு 05 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேற்படி நிவாரணப் பொருட்களில் பல்வேறு மோசடிகள் உள்ளதாக ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ

தொடர்பான செய்தி: காலாவதியடைந்த உணவுப் பொருட்கள் புதிய திகதியிடப்பட்டு விநியோகம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றொரு மோசடி குறித்து புகார்

Comments