கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகிறார் மீண்டும் நிஸாம்: நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்தது

🕔 July 16, 2020

– எ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) –

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீண்டும் செயற்படுவதற்கு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்துள்ளது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நீண்ட காலமாக பணியாற்றிய நிஸாம், அந்தப் பதவியிலிருந்து கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ரோஹித போகொல்லாகமவினால் இடைநிறுத்தப்பட்டதோடு, அந்த இடத்துக்கு எம்.கே.எம். மன்சூர் என்பவரை ஆளுநர் நியமித்தார்.

பின்னர் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பதவிக்கு வந்த போது, மாகாண கல்விப் பணிப்பாளராக நிஸாம் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் செய்யப்பட்ட இந்நியமனத்தை எதிர்த்து திருகோணமலை – மாகாண மேல் நீதிமன்றத்தில் மன்சூர் வழக்கொன்றினைத் தொடர்ந்தார். அதனைஆராய்ந்த மேல் நீதிமன்றம், மாகாண கல்வி பணிப்பாளராக நிஸாம் செயற்படுவதற்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அத்துடன் குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பு வழங்கும் வரை குறிப்பிட்ட தடை உத்தரவு அமுலில் இருந்தது.

பின்னர் குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பு – கடந்த ஜுன் மாதம் 01ஆம் திகதியன்று திருகோணமலை – மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மானிக்கவாசகர் இளஞ்செழியனினால் வழங்கப்பட்டது. அதில் மன்சூர் தொடர்ந்தும் மாகாணக் கல்விப் பணிப்பாளராக செயற்பட அனுமதியளிக்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் மாகாண மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஆட்சேபித்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்றினை எம்.ரி.எம். நிஸாம் தாக்கல் செய்திருந்தார்.

நீதியரசர்களான ஸிறான் குணதிலக மற்றும் ருவான் பெணான்டோ முன்னிலையில் குறித்த மனு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது திருகோணமலை – மாகாண மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது.

முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யு.எம். அலி சப்ரி ஆஜராகியிருந்தார்.

Comments