நஸீரை கழற்றி விட்ட ஹக்கீம்; அட்டாளைச்சேனை மேடையில் சொன்னது என்ன?

🕔 July 15, 2020

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும், சில வேட்பாளர்கள் குறித்து முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களிடம் சில குற்றச்சாட்டுகள் இருக்கும் என்றும், அதனை மனதில் வைத்து பகுத்துப் பார்த்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்குமாறும் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே, மேற்கண்டவாறு ஹக்கீம் கூறினார்.

குறித்த கூட்டத்தில் நஸீருக்கு வாக்களியுங்கள் என்றோ, அவரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்குங்கள் என்றோ, ஹக்கீம் கோரிக்கை விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று செவ்வாய்கிழமை இரவு அட்டாளைச்சேனை மருதையடியில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

எவ்வாறாயினும் நேற்று முன்தினம் முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தொலைபேசிச் சின்னத்தில் மு.காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றவருமான பைசல் காசிமுடைய சொந்த ஊரான நிந்தவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மு.கா. தலைவர் கலந்து கொண்டு பேசும்போது; “அடுத்த நாடாளுமன்றத்தில் மு.காங்கிரஸ் தலைவருடன் பைசல் காசிம் இருந்தே ஆக வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளமை காரணமாகவே, அட்டாளைச்சேனையில் நடைபெற்ற கூட்டத்தில்; ‘சில வேட்பாளர்கள் குறித்து முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களிடம் சில குற்றச்சாட்டுகள் இருக்கின்றன, அதனை மனதில் வைத்து பகுத்துப் பார்த்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களியுங்கள்’\ என்று ஹக்கீம் கூறினார் என, மு.கா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ

Comments