சிறைச்சாலைகளுக்குள் அதிரடித் தேடுதல்: கைத் தொலைபேசிகள், ஹெரோயின், கஞ்சா உட்பட மேலும் பொருட்கள் சிக்கின

🕔 June 10, 2020

நீர்கொழும்பு, கொழும்பு, போகம்பர மற்றும் பூசா சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 82 கைத் தொலைபேசிகள், 55 சிம் அட்டைகள், பட்டறிகள் மற்றும் சார்ஜர்களுடன் போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

இந்தத் தேடுதல் நடவடிக்கையினை சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொண்டனர்.

நீர் கொழும்பு சிறைச்சாலையினுள் சிறைச்சாலை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தேடுதலின் போது 61 கைத் தொலைபேசிகள், 51 சிம் அட்டைகள், 71 பட்டறிகள், 30 சார்ஜர்கள், 16 கிராம் ஹெரோயின் மற்றும் 02 கிராம் கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு விளக்கமறியலில் 02 கைத்தொலைபேசிகளையும், போகம்பர சிறைச்சாலையில் இருந்து 04 கைத்தொலைபேசிகளையும், மகசின் சிறைச்சாலையில் இருந்து 12 கைத்தொலைபேசிகளையும், பூசா சிறைச்சாலையில் இருந்து 03 கைத்தொலைபேசி, 04 சிம் அட்டைகள், 01 பட்டறி ஆகிவற்றையும் சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் எனவும் ஆணையாளர் துஷார உபுல்தெனிய கூறியுள்ளார்.

பூஷா சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகளும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

சிறைத்தண்டனை அனுபவிக்கும் சில குறிப்பிடத்தக்க பாதாள உலக குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் மாபியா மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளுக்குள் இருந்தவாறே சிலர் குற்றச்செயல்களை வெளியில் செயற்படுத்தி வருவதாகவும், இவை தொடர்பில் தான் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சிறைச்சாலை ஆணையாளராக துஷார உப்புல்தெனிய நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்