அரச நிதியைக் கொண்டு, சொந்தக் காணிக்கு மணல் நிரப்பிய குற்றச்சாட்டு: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊழலில் ஈடுபட்டாரா?

🕔 December 28, 2019

  – மப்றூக்

ழல், மோசடி என்பது பெரும் நோய்போல உலகெங்கும் பரவியிருக்கிறது. சிறிய அளவிலும், பெரிய அளவிலுமாக நாளாந்தம் ஊழல்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆனாலும் மக்களில் கணிசமானோர் இவை குறித்து அலட்டிக் கொள்வதில்லை. ஊழல்  மற்றும் மோசடி குறித்து சிலர் கவலைப்பட்டாலும், அவர்களில் பெரும்பாலானோர் அவற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும், அவற்றில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தயங்குகின்றனர். இவற்றின் காரணமாக ஊழல், மோசடிகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

உலகளவில் ஊழல் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை கவலக்குரியதொரு இடத்தில் உள்ளது. 180 நாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றை குறைந்த ஊழல் இடம்பெறும் நாடுகள் எனும் வகையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தி, ‘ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டநஷனல்’ அமைப்பு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த வருடம் (2018) இலங்கை 80ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டநஷனல்’ வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் உலகில் மிக அதிகமாக ஊழல் இடம்பெறும் நாடாக (180ஆவது இடம்) சோமாலியா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, ஊழல் மிகவும் குறைந்த நாடு எனும் இடம் – அந்தப் பட்டியலில் டென்மார்க் நாட்டுக்கு (01ஆவது இடம்) கிடைத்துள்ளது.

முதலில் ஊழல் என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்தல் அவசியமாகும். ‘நபரொருவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை, தனிப்பட்ட ஆதாயத்துக்காக பயன்படுத்துவதை அல்லது துஸ்பிரயோகம் செய்வதை’ ஊழல் என, வரையறை செய்ய முடியும்.

எவ்வாறாயினும், “பொது சொத்துக்களுக்குப் பொறுப்பான அரச அதிகாரிகள், அந்த சொத்தை தனிப்பட்ட லாபத்துக்காகப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்டறிவது என்பது – நீரில் நீந்தும் மீன், அந்த நீரை அருந்துகின்றதா என்று கண்டறிவது போன்று கடினமானது” என்று கூறியுள்ளார் கௌடில்யல்.

ஆனாலும், இந்தக் கடினங்களை எதிர்கொண்டுதான், அரச உத்தியோகத்தர்களும், அதிகாரிகளும் செய்கின்ற ஊழல்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. ஊழல், மோசடிகள் குறித்து புலனாய்வு செய்யும் ஊடகவியலாளர்களுக்கு இது சவாலானதொரு விடயமாகும்.

அரச அதிகாரி மீதான குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அரச அதிகாரியொருவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல் நடவடிக்கையொன்று குறித்து, சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டபோது, அது குறித்து தேடிப்பார்க்க வேண்டியதொரு சூழ்நிலை ஊடகவியலாளர் எனும் வகையில் நமக்கு ஏற்பட்டது.

கிடைத்த சில தகவல்களை வைத்துக் கொண்டு, அந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்த போது, மென்மேலும் பல ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டறிய முடிந்தது.

2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள வளலவாய் கிழல் கண்டத்திலுள்ள தனியார் ஒருவரின் நெற்காணியில் EP, RD – 2296 எனும் இலக்கத்தையுடைய உழவு இயந்திரம் ஒன்றின் மூலம், மணல் கொட்டும் நடவடிக்கையொன்று இடம்பெற்றது.

குறித்த உழவு இயந்திரத்தின் முகப்பில் ‘Divisional Secretariat – Addalaichenai’ (பிரதேச செயலகம் – அட்டாளைச்சேனை) என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ‘போர்ட்’ ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்விவகாரம் தொடர்பில் அதே தினம் அட்டாளைச்சேனை வளலவாய் கிழல் கண்டம் விவசாய குழுவின் தலைவர் மற்றும் செயலாளர் ஒப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதமொன்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தில்; வளலவாய் கிழல் கண்டத்திலுள்ள ‘மணல் புட்டி’ வீதியை செப்பனிடுவதற்குரிய அரச நிதியைக் கொண்டு பெறப்பட்ட மணல், தனிப்பட்ட ஒருவரின் வயற்காணிக்குள் கொட்டப்பட்டு கலைக்கப்படுவதாகவும், அந்த நடவடிக்கையை இடைநிறுத்துமாறும் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதாவது அரச நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதாக அந்தக் கடிதத்தின் மூலம் வளலவாய் கிழல் கண்ட விவசாய குழுவினர் குற்றம் சாட்டினார்கள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரப்பட்ட விவரம்

இந்த நிலையில், 20/08/2019 அன்று வளலவாய் கிழல் கண்டத்திலுள்ள தனியார் காணியில் EP, RD – 2296 எனும் இலக்கத்தையுடைய உழவு இயந்திரத்தின் மூலம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் மணல் கொட்டும் நடவடிக்கைகள் ஏதாவது இடம்பெற்றதா எனும் தகவலைக்  கோரி, வளலவாய் கிழல் கண்ட விவசாயக் குழுவின் தலைவர் எம்.ஐ. சியாத் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் 12/09/2019 அன்று விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தார்.

அந்த விண்ணப்பத்துக்கு 18/09/2019 அன்று திகதியிட்டு எம்.ஐ. சியாத் என்பவருக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலக தகவல் அலுவலர் அனுப்பி வைத்திருந்த பதில் கடிதத்தில்; ‘EP, RD – 2296 இலக்க உழவு இயந்திரத்தின் மூலம் வளலவாய் கிழல் கண்டத்திலுள்ள தனியார் காணியில் 2019/08/20ம் திகதி வேலை செய்ய, தங்களால் எவ்வித அனுமதியும் யாருக்கும் வழங்கப்படவிலலை’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

உத்தவித் திட்டப் பணிப்பாளரின் சட்டத்தரணி  – கடிதம்

இவ்வாறான சூழ்நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஏ.எல்.எம். அஸ்லம் என்பவர் சார்பாக, அவரின் சட்டத்தரணி ஏ.எல். ஆஸாத் என்பவர், வளலவாய் கிழல் கண்ட விவசாயக் குழுவின் தலைவர் எம்.ஐ. சியாத் என்பவருக்கு 50 லட்சம் ரூபா மான நஷ்டஈடு கோரும் கடிதம் ஒன்றினை 02/09/2019 எனும் திகதியிட்டு அனுப்பி வைத்திருந்தார்.

‘இலக்கம் 61, கடற்கரை வீதி, அட்டாளைச்சேனை – 11 எனும் முகவரியில் வசிக்கும் எனது கட்சிக்காரரான அஹமட்லெப்பை அஸ்லம் என்பவர் தனக்குச் சொந்தமான வயல் காணியில், தனது செலவில் குறித்த வயற்காணியை செப்பணிடும் பொருட்டு மணல் கொட்டிய சம்பவத்தை திரிவுபடுத்தி, எனது கட்சிக்காரருக்கு அவதூறு ஏற்படும் வகையில்; மணல்புட்டி வீதியை செப்பனிடுவதற்கான பணத்தின் மூலம் பெறப்பட்ட மணலை, ஒரு தனி நபரின் வயல் காணிக்குள் போட்டு கலைக்கப்படுவதாகக் கூறி, எனது கட்சிக்காரருக்கு சொந்தமான வயற் காணியின் புகைப்படத்தை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு அனுப்பி, எனது கட்சிக்காரர் அரச நிதியை மோசடியாகப் பயன்படுத்தி தனது வயலை செப்பனிடுவதாக பொருள்படும் வகையில், உண்மைக்குப் புறம்பாக 20/08/2019 திகதிய கடிதம் மூலம் பிரதேச செயலாளருக்கு அறிவித்தமையினால், எனது கட்சிக்காரரை பரிய மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதோடு, அவருக்கு சமூகத்திலிருந்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி மானநஷ்டப்படுத்தியுள்ளீர்.

இவ்வாறு எனது கட்சிக்காரர் தனக்கு ஏற்பட்ட பாரிய மன உளைச்சலுக்கும், வேதனைக்கும், மான நஷ்டத்துக்குமான பணப்பெறுமதி 50 லட்சம் ரூபா என மதிப்பிடுகிறார். எனவே, இக்கடிதம் கிடைக்கப்பெற்று 15 நாட்களுக்குள் 50 லட்சம் ரூபா பணத்தை, அல்லது அதற்கு சமமான அசையும் அல்லது அசையா சொத்தை எனது கட்சிக்காரருக்கு வழங்குமாறு வேண்டப்படுகின்றீர்’ என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆயினும், குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை மறுதலித்து, வளலவாய் கிழல் கண்ட விவசாயக் குழு தலைவர் எம்.ஐ. சியாத் சார்பாக, அவரின் சட்டத்தரணி 16/09/2019 அன்று, ஏ.எல். அஸ்லம் என்பவரின் சட்டத்தரணிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பினார்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

இதன்பின்னர் சுமார் 01 மாதம் கடந்த நிலையில் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பெயரை சட்டவிரோதமாக காட்சிப்படுத்திய உழவு இயந்திரத்தின் மூலம், தனியார் ஒருவரின் நெற் காணியில் மண் கொட்டப்பட்டமை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு 14/10/2019 அன்று, இந்தக் கட்டுரையினை எழுதும் ஊடகவியலாளர் கடிதமொன்றினைக் கையளித்தார்.

மறுநாள் 15/09/2019 அன்று அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திலும் இந்தக் கட்டுரையினை எழுதும் ஊடகவியலாளர்; மேற்படி விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பொதுநலன் கருதிய முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்தார்.  

அதேவேளை, அம்மாறை மாவட்ட அரசாங்க அதிபரை நேரடியாகச் சந்தித்த சமூக ஆர்வலர்கள் குழுவொன்றும் இவ்விடயம் குறித்து தெரியப்படுத்தியதோடு, எழுத்து மூலமான முறைப்பாடொன்றினையும் கையளித்தது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இவ்விவகாரம் குறித்து, இக் கட்டுரையின் ஊடகவியலாளர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய – சம்பந்தப்பட்ட உதவித் திட்டப் பணிப்பாளர்; சர்ச்சைக்குரிய வயற்காணி தன்னுடையது அல்ல என்றும், தான் மணல் கொட்டும் நடவடிக்கைகள் எவற்றிலும் அங்கு ஈடுபடவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

அதாவது, வளலவாய் கிழல் கண்ட விவசாய குழு தலைவருக்கு சட்டத்தரணி ஊடாக அனுப்பி வைத்த – மான நஷ்டஈடு கோரும் கடிதத்தில், குறித்த வயற்காணி தன்னுடையது என்றும், அங்கு மணல் கொட்டும் நடவடிக்கையில் தானே ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்த, அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்; அக்கரைப்பற்று பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், அந்தக் காணி தன்னுடையதல்ல என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நேரடியாக தங்களால் நடவடிக்கைகள் எவற்றினையும் மேற்கொள்ள முடியாது என முறைப்பாட்டாளரிடம் தெரிவித்த அக்கரைப்பற்று பொலிஸார், இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு அறிவிப்பதாகக் கூறி, அந்த முறைப்பாட்டினை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

எவ்வாறாயினும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் இது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

அரசாங்க அதிபர் நடவடிக்கை

இந்தப் பின்னணியில், மேற்படி உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல். பண்டாரநாயக்க நடவடிக்கையொன்றினை மேற்கொண்டார்.

அதனடிப்படையில் இந்த விவகாரம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக, உஹன பிரதேச செயலாளராக் கடமையாற்றும் ஏ.எம்.ஏ. குமாரி என்பவரை விசேட விசாரணை அதிகாரியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நியமித்தார்.

இதனையடுத்து கடந்த 13/12/2019 அன்று காலை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு வருகை தந்த மேற்படி விசேட விசாரணை அதிகாரி; அங்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கணக்காளர் ஆகியோரிடம் விசாரணைகளை நடத்தியதாகவும், குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புட்ட முக்கிய ஆவணங்கள் சிலவற்றை பிரதேச செயலகத்தில் கைப்பற்றியதாகவும் அறியமுடிகிறது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலுள்ள சில சொற்கள் ‘டிப்பக்ஸ்’ (Tippex) மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக அல்லது மறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

நடந்தது என்ன?

ஒட்டுமொத்மாக இந்த விவகாரத்தில் அட்டாளைச்சேனை உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் முழு விவரம் இதுதான்;

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ‘புட்டி’ வீதி நிர்மாணத்துக்காக கம்பெரலிய திட்டத்தின் கீழ் 05 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிதியைக் கொண்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட வளலவாய் கிழல் கண்டத்திலுள்ள வயற் காணிகளுக்கிடையில் அமைந்துள்ள ‘மணல் புட்டி’ எனும் வீதியை செப்பனிடுவதற்கான மாற்று திட்டத்தை உரிய அனுமதிகள் எவற்றினையும் பெறாமல், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனடிப்படையில்தான் மணல் புட்டி வீதியை செப்பனிடுவதற்காக எனக் கூறப்பட்டு கொண்டு வரப்பட்ட மணலை, குறித்த உதவித் திட்டமிடல் பணிப்பாளர் – அங்குள்ள தனக்குச் சொந்தமான காணில் கொட்டி கலைத்ததாக வளலவாய் கிழல் கண்ட விவசாயக் குழு புகார் தெரிவித்துள்ளது.

புட்டி வீதி நிர்மாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, உரிய அதிகாரிகளின் அனுமதிகளைப் பெறாமல் – மணல் புட்டி வீதியைச் செப்பனிடுவதற்காக மாற்றி, அதன் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட மணலை, அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர், மணல்புட்டி வீதியருகில் உள்ள தனது சொந்தக் காணியில் கொட்டிக் கலைத்துள்ளார் எனும் புகார், பொதுமக்கள் மத்தியில் பரவியமையினை அடுத்து – குறித்த நிதி, எந்த வீதிக்காக ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டதோ, அந்த ‘புட்டி’ வீதிக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டு, தற்போது அந்த வீதி – கொங்றீட் வீதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புட்டி வீதி நிர்மாணத்திலும் ஏராளமான தவறுகளும் குறைபாடுகளும் உள்ளதாக, எழுத்து மூலம் தெரிவிக்கும் முறைப்பாட்டுக் கடிதமொன்று 26/09/2019 திகதியிடப்பட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு அனுப்பப்பட்டது.

லஞ்ச, ஊழல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இதனையடுத்து அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்; புட்டி வீதிக்காக ஒதுக்கப்பட்ட அரச நிதியை – உரிய அனுமதியின்றி மணல்புட்டி வீதியை செப்பனிட மாற்றியதாகவும், அவ்வாறு மாற்றப்பட்ட நிதியைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட மணலை தனது சொந்தக் காணியில் கொட்டிக் கலைத்ததாகவும் எழுந்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயுமாறு கோரி லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிலும் 13/12/2019 அன்று இந்தக் கட்டுரையினை எழுதும் ஊடகவியலாளர் எழுத்துமூலம் கோரிக்கையொன்றை விடுத்தார்.

இந்த சூழ்நிலையில் 07 வருடங்களுக்கும் மேலாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த மேற்படி சர்ச்சைக்குரிய உதவித் திட்டப் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவர், கடந்த 18ஆம் திகதியன்று, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவுக்கிணங்க, அம்பாறை கச்சேரிக்கு உடனடியாக இடம் மாற்றப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்குள்ளான உதவித் திட்டப் பணிப்பாளர் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் தொடந்தும் இருந்தால், அவருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பான ஆவணங்களையும் சாட்சியங்களையும் அங்கு அவர் இல்லாமல் செய்யலாம் அல்லது மாற்றி விடலாம் என்கிற சந்தேகங்கள் எழுந்தமையினை அடுத்தே, இந்த இடமாற்றம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

அரச நிதி என்பது – பொதுமக்களின் பணமாகும். அவ்வாறான பணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மேற்படி ஊழல் தொடர்பில் பக்கச்சார்பற்றதும், நீதியானதுமான விசாரணைகள் நடத்தப்பட்டு, அந்த ஊழலுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அவ்வாறு பெற்றுக் கொடுக்கப்படும் தண்டனைகள், ஏனைய அரச அதிகாரிகளுக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதும், பொதுமக்களின் நம்பிக்கையாகும். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்