தேசியப்பட்டியல் எம்.பி. இஸ்மாயில் எங்கே? கல்முனையில் மக்கள் தேடுகின்றனர்

🕔 June 22, 2019

– அஹமட் –

நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுக்கு பதிலளிக்கும் நடவடிக்கைகளிலோ அல்லது தற்போது அம்பாறை மாவட்டத்தில் பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள கல்முனை உப பிரதேச சபையை தரமுயர்த்தும் விவகாரத்திலோ, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் எந்தவித பங்களிப்புகளைம் வழங்காமல் உள்ளமை தொடர்பாக, சமூகவலைத்தளங்களில் கேள்வியெழுப்பப்படுகிறது.

குறிப்பாக, கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தை முன்னிறுத்தி, கல்முனை சமாதான சதுக்கத்தில் முஸ்லிம்கள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகத்தில், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தி வரும் நிலையில், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் – இதுவரை அங்கு செல்லவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்கள், முஸ்லிம்களின் சத்தியாக்கிரகத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

சம்மாந்துறையை கௌரவப்படுத்துவதற்காக, அந்த ஊரைச் சேர்ந்த இஸ்மாயிலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாட் பதியுதீன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கிய போதும், கடந்த வருடம் இடம்பெற்ற 51 நாள் அரசியல் சதியின் போது, மஹிந்த தரப்புக்கு அணி மாறி, பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தவர் இந்த இஸ்மாயில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவர் ஏ.எம். ஜெமீல், தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத், அந்தக் கட்சியைச் சேர்ந்த நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் உள்ளிட்ட பலர், கல்முனையில் முஸ்லிம்கள் ஏற்பாடு செய்துள்ள சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு, தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அதே கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், இப்படிக் காணாமல் போயிருப்பதன் மர்மம் என்ன என்றும், சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ், ஏ.எல்.எம். நசீர், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலரும், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், கல்முனையில் முஸ்லிம்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரக நடவடிக்கையில் கலந்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்