எனது மகனை கைது செய்தவர்களை, நான் பார்த்துக் கொள்கிறேன்: மஹிந்த ராஜபக்ஷ

🕔 February 15, 2018

பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்தி அரசாங்கமொன்றினை அமைக்கும் பொருட்டு நாடாளுமன் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் சந்தித்துள்ளது.

இந்த குழுவில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர்.

ஜனாதிபதியுடன் இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, நாமல் ராஜபக்ஷ கேள்வியொன்றை தொடுத்துள்ளார்.

“ஜனாதிபதியவர்களே, என்னை நீங்கள் கைது செய்தது பற்றியும் பரவாயில்லை. ஏன் எனது தம்பி யோசிதவை கைது செய்தீர்கள்” என்று, ஜனாதிபதியிடம் நாமல் கேட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி; “எனக்கு அதுகுறித்து ஒன்றும் தெரியாது. அந்த அமைச்சு என்னிடமில்லை. அது பிரதமரிடம்தான் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

“அப்படியென்றால் எனது தம்பியைக் கைது செய்தமைக்கும் உங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லையா” என்று நாமல் கேட்டுள்ளார்.

“அந்தச் சம்பவம் தொடர்பில் எனக்குத் தெரியாது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு சாகல ரத்நாயக்கவிடம்தான் உள்ளது. அதன் செயற்பாட்டுடன் நான் தொடர்புபடுவதில்லை. அழுத்தம் கொழுப்பதுமில்லை” என, ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

இதன்போது, அந்த இடத்திலிருந்தே, தனது தந்தை – மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாமல் ராஜபக்ஷ தொலைபேசி அழைப்பெடுத்து பேசியுள்ளார்.

“அப்பா, ஜனாதிபதியுடன்தான் நான் இருக்கிறேன். யோசிதவை கைது செய்தமைக்கும் தனக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்று, ஜனாதிபதி கூறுகிறார். அனைத்தையும் அமைச்சர் சாகல ரத்நாயக்கதான் செய்துள்ளார்”  என்று, மஹிந்தவிடம் நாமல் கூறியுள்ளார்.

இதனைச் செவியுற்ற மஹிந்த; “சரி சரி, எனது மகனைக் கைது செய்தவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறி விட்டு, தொலைபேசி தொடர்பை துண்டித்துள்ளார்.

இந்தச் செய்தியை ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்