பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய அரசியல் வெற்றிக்காக உழைத்த அன்வர்டீன், அமைச்சர் றிசாத்துடன் கைகோர்த்தார்

🕔 January 2, 2018

– அஹமட் –

பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய அரசியல் வெற்றிக்காக உழைத்தவரும், முஸ்லிம் காங்கிரசின் நிந்தவூர் பிரதேச பிரமுகருமான ஏ.எல். அன்வர்டீன், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்று திங்கட்கிழமை இணைந்து கொண்டார் எனத் தெரியவருகிறது.

அம்பாறை ‘மொன்டி’ ஹோட்டலில், நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீனைச் சந்தித்த அன்வர்டீன், மக்கள் காங்கிரசுடனான தனது இணைவினை உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய சொந்த ஊரான நிந்தவூரைச் சேர்ந்த அன்வர்டீன், கடந்த காலங்களில் பைசாலின் அரசியல் வெற்றிக்கு முன்னின்று உழைத்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராவார்.

தனியார் வங்கியொன்றில் முகாமையாளராகக் கடமையாற்றும் அன்வர்டீனை, நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுமாறு பிரதியமைச்சர் வேண்டிக் கொண்டதாகவும், ஆனால் அதனை அன்வர்டீன் மறுத்ததாகவும் அறிய முடிகிறது.

இந்த நிலையில், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போது நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிடுபவருமான எம்.ஏ.எம். தாஹிர் அணியில், அன்வர்டீன் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

பிரதியமைச்சர் பைசால் காசிம் –  நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை யானைச் சின்னத்தில் களமிறக்கி – வழி நடத்தி வருகின்ற நிலையிலேயே, அவருக்கு எதிரான அரசியல் தரப்பினரோடு அன்வர்டீன் கைகோர்த்துள்ளார்.

நிந்தவூர் நெல்நெல் வட்டாரத்தில் யானைச் சின்ன வேட்பாளராக, தனது மருமகனை பைசால் காசிம் களமிறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்