கிழக்கு முதலமைச்சரின் பொறுப்பற்ற உறுதிமொழி காரணமாகவே, வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது: உறுப்பினர் சுபையிர்

🕔 April 25, 2017
– எஸ். அஷ்ரப்கான் –

வேலையற்ற பட்டதாரிகளுக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கிய பொறுப்பற்ற உறுதிமொழிதான்,  பட்டதாரிகளின் போராட்டம் தொடர்வதற்குக் காரணமாகும் என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 76ஆவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை, பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார் தலைமையில் நடைபெறுகிறது.

இதன்போது வேலையற்ற பட்டதாரிகளின் வேலை வாய்ப்புப் பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம் அவசரப் பிரேரணையொன்றினை சமர்ப்பித்தார். அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே  மேற்கண்டவாறு சுபையிர் கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“பட்டதாரிகளின் பிரச்சினை இன்று எமது நாட்டில் ஒரு தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் 1986ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் எந்தவொரு கொள்கைகளும் இதுவரை வகுக்கப்படவில்லை இது மிகவும் கவலையான விடயமாகும்.

ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவோம் என போலியான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் அதுதொடர்பில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனாலே இன்று பட்டதாரிகள் ஏமாற்றப்படுகின்றனர்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை வடமாகாண முதலமைச்சர்  சந்தித்த போது, ஜனாதிபதியை சந்தித்தவுடன் இதற்கான தீர்வினை வழங்குவேன் என்று பொறுப்புடன் பட்டதாரிகளுக்கு வாக்குறுதியளித்தார்.

ஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் பட்டதாரிகளை சந்தித்த போது, ஓரிரு தினங்களில் தீர்வினை வழங்குவேன் என பொறுப்பற்ற விதத்தில் வாக்குறுதிகளை வழங்கினர். இதனாலே இன்று வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது.

எனவே கிழக்கு மாகாண பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் பொறுப்புடன் செயற்பட வேண்டும். குறிப்பாக இந்த விடயமாக அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து பட்டதாரிகளின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்” என்றார்.

Comments