தவமும் நசீரும்; அழையாமல் வைத்த ஆப்பும், அழைத்துக் கொடுத்த பருப்பும்

🕔 April 24, 2017

– வழங்குபவர் வட்டானையார் –

ரசியலில் மக்கள் விழிப்படையத் தொடங்கி விட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், அவ்வப்போது சில விடயங்கள் நடந்தேறி வருகின்றன. அந்த வகையில் கிழக்கு மாகாண சபையின் மு.காங்கிரஸ் பிரதிநிதிகள் இருவருக்கு கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாத வகையிலும் பொத்துவில் பிரதேச மக்கள் அண்மையில் ஆப்படித்திருக்கின்றனர். இதனால், குறித்த அரசியல்வாதிகள் இருவரும் அசிங்கப்பட்டுப் போயுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

நடந்த கதை இதுதான்

பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி வலயம் ஒன்றினை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில், உப கல்வி வலயமொன்று பொத்துலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,  அந்த உப கல்வி வலயத்துக்கு முக்கிய அதிகாரங்கள் எவையும் கையளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், குறித்த உப கல்வி வலயத்துக்கு முக்கிய அதிகாரங்கள் சிலவற்றினை வழங்குமாறு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. பொத்துவில் இன்ரலக்சுவல் சொசைட்டி (பொத்துவில் புத்திஜீவிகள் சமூகம்) எனும் அமைப்பு, இது விடயத்தில் தீவிரமாகச் செயற்பட்டது. இதனையடுத்து, உப கல்வி வலயத்துக்கு அதிகாரங்களை வழங்க – சம்பந்தப்பட்டவர்கள் சம்மதித்தனர்.

இதேவேளை,  பொத்துவில் பிரதேசத்தின் கஷ்டப் பகுதியொன்றில் பாடசாலையொன்றினை அமைக்க வேண்டிய தேவையொன்றும் இருந்தது. இது குறித்தும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரிடம் பொத்துவில் இன்ரலக்சுவல் சொசைட்டி கோரிக்கை விடுக்க, அவரும் ஆகட்டும் என்றார். இதற்கிணங்க, குறித்த பகுதியில் மர்வா எனும் பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, உப கல்வி வலயத்துக்கு அதிகாரங்களை உத்தியோகபூர்வமாகக் கையளிப்பதையும் மற்றும் மர்வா பாடசாலையினை திறப்பதையும் விழாவாக எடுப்பதற்கு பொத்துவில் இன்ரலக்சுவல் சொசைட்டி தீர்மானித்தது.

தீர்மானங்கள்

குறித்த விழாவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி. நிஸாம் மற்றும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டோரை அழைப்பதென விழா ஏற்பாட்டினை மேற்கொண்ட பொத்துவில் இன்ரலக்சுவல் சொசைட்டி முடிவு செய்தது. அதேவேளை, பொத்துவில் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் ஆகியோரை அழைக்கக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, முதலமைச்சர் ஹாபிஸ் நசீரை சந்தித்த பொத்துவில் இன்ரலக்சுவல் சொசைட்டியினர், குறித்த விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர். அதேவேளை, தவம் மற்றும் நசீர் ஆகியோரை தாம்  அழைப்பதில்லை என்பதையும் தெரியப்படுத்தினர்.

முதலமைச்சரின் வேண்டுகோள்

ஆனால், இதற்கு முதலமைச்சர் இணங்கவில்லை. அவர்கள் இருவரும் தமது கட்சிக்காரர்கள் என்றும், அவர்களை புறக்கணித்து விட்டு, அவர்களுடைய தொகுதியில் நடைபெறும் ஒரு விழாவில் பங்கேற்றால், தன்னைப் பற்றி அவர்கள் தவறாக நினைத்து விடுவார்கள் எனவும் ஹாபிஸ் நசீர் கூறினார். எனவே, குறித்த இருவரையும் அழைக்குமாறு ஹாபிஸ் நசீர் வேண்டினார். இதனால், முதலமைச்சரைப் பகைத்துக் கொள்ள விரும்பாத பொத்துவில் இன்ரலக்சுவல் சொசைட்டியினர் தமது புத்திசாலித்தனமான விளையாட்டினை ஆடுவதற்குத் தீர்மானித்தனர்.

புறக்கணிக்கப்பட்ட தவம்

முதலமைச்சர் வேண்டிக் கொண்டமைக்காக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரை தமது விழாவுக்கு அழைப்பதாக பொத்துவில் இன்ரலக்சுவல் சொசைட்டி ஒப்புக் கொண்டது. ஆனால், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவத்தை அழைப்பதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். பொத்துவில் பிரதேசத்தின் கல்வி வீழ்ச்சியடைவதற்கு மாகாணசபை உறுப்பினர் தவம் பிரதான காரணமானவர் என்று பொத்துவில் மக்கள் கூறுகின்றனர். அதனால்தான், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அண்மையில் கலந்து கொண்ட பொத்துவில் கூட்டத்திலும், மாகாணசபை உறுப்பினர் தவம் உரையாற்றக் கூடாது என்று, மக்கள் கோசமெழுப்பியதோடு, கூட்ட மேடைக்கும் கல்வீசி தாக்கியிருந்தனர்.

இருக்கு ஆனால் இல்லை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரை விழாவுக்கு அழைப்பதில்லை என்று முடிவு செய்திருந்த போதே, ஏற்பாட்டாளர்கள் விழாவுக்கான அழைப்பிதழ்களை அச்சிட்டு விட்டனர். அதனால், அழைப்பிதழ்களில் நசீரின் பெயர் இடம்பெறவில்லை. பின்னர் முதலமைச்சர் கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக, சுகாதார அமைச்சர் நசீரை அழைப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் ஒப்புக் கொண்ட பின்னர், நசீரின் பெயரை உள்ளடக்கி  கொஞ்சம் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன.

இந்த நிலையில், குறித்த விழாவுக்கு வருகை தருமாறு பொத்துவிலில் பகிரப்பட்ட அழைப்பிதழ்கள் சிலவற்றில் சுகாதார அமைச்சர் நசீரின் பெயர் இருந்தன. சில அழைப்பிதழ்களில் நசீரின் பெயர் இருக்கவில்லை.

கெஞ்சிக் கூத்தாடிய கிழக்கு பிரதிநிதி

மேற்படி விழாவுக்கு – தான் அழைக்கப்படாமல், புறக்கணிக்கப்பட்டமையானது, மாகாணசபை உறுப்பினர் தவத்துக்கு பெருத்த அவமானமாகி விட்டது. இதனால், தன்னையும் அழைத்துப் போகும்படி முதலமைச்சரிடம் தவம் வேண்டிக் கொண்டார். ஆனால், தவத்தை அழைத்துக் கொண்டு சென்றால், பொத்துவிலில் என்ன நடக்கும் என்பதை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அனுமானித்துக் கொண்டு, தவத்தை வரவேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஆனால், தவம் விடவில்லை. தமக்கு ஏற்பட்ட அவலநிலை குறித்து மு.கா. தலைவரிடம் பேசினார். தன்னை அழைத்துக் கொண்டு செல்லுமாறு முதலமைச்சரிடம் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, மு.கா. தலைர் ரஊப் ஹக்கீம், முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தவத்தையும் அழைத்துச் செல்லுங்கள் என்றார். ஆனால், நிலைமையை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், மு.கா. தலைவரக்குச் சொல்லி விளக்கினார்.

இதனால், தவத்தை விட்டு விட்டு – முதலமைச்சரும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் பொத்துவில் சென்றனர்.

அங்கு சுகாதார அமைச்சர் நசீருக்கு காத்திருந்தது ஆப்பு.

தலைகீழான ‘ப்ரோடோகோல்’

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர், பொத்துவில் விழா ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டாததொரு விருந்தாளியாக இருந்தார். மட்டுமன்றி, பொத்துவிலுக்கு நசீரும் அரசியல் ரீதியாக அநீதியிழைத்துள்ளதாக அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். இதனால், அந்த விழாவில் நசீரை எப்படியெல்லாம் அவமானப்படுத்தலாமோ, அந்தளவுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் அவமானப்படுத்தி அனுப்பினர்.

அதாவது, ஒரு விழாவில் உரையாற்றுவதற்கு சிலரை அழைப்பதென விழா ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்தால், அவர்களில் முதலாவதாகப் பேசுவதற்கு – பதவி வழியில் குறைந்தவரையே அழைக்க வேண்டும். பதவி வழியில் உச்சமானவர் இறுதியாக உரையாற்ற அழைக்கப்படுதல் வேண்டும். இதனை ஆங்கிலத்தில் ப்ரோடோகோல் (நெறிமுறை) என்று அழைப்பர்.

ஆனால், பொத்துவிலில் நடைபெற்ற விழாவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரை முதலாவதாக அழைத்து விழாக் குழுவினர் பேச வைத்தனர். அதன் பின்னர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரை விடவும் பதவி வழியில் குறைந்தவர்களை அழைத்து விழா ஏற்பாட்டாளர்கள் பேச வைத்தனர். இது சுகாதார அமைச்சர் நசீருக்கு கடுமையான அவமானத்தை ஏற்படுத்தியது. இது ஒருபுமிருக்க, நசீர் தனது உரையில்; தனது வேண்டுகோளுக்கு இணங்கவே, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஹாபிஸ் நசீர், அந்த விழாவில் கலந்து கொள்வதாக கூறியதோடு, பொத்துவில் உப கல்வி வலயத்துக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அறியாத மனசு

உண்மையில், தான் கலந்து கொண்ட நிகழ்வானது, பொத்துவில் உப கல்வி வலயத்துக்கு அதிகாரங்களை வழங்குவதற்கான நிகழ்வு என்பதைக் கூட நசீர் அறிந்திருக்கவில்லை.

இதனையடுத்து, சுகாதார அமைச்சர் நசீருக்கு பின்னர் பேசியர்கள் இந்த நிகழ்வே, உப கல்வி வலயத்துக்கு அதிகாரங்களைக் கையளிப்பதற்கானதாகும் என்று கூறியபோது, நசீரின் முகத்தில் ஈயாடவில்லை. அவமானத்து மேல் அவமானமானது.

இத்தோடு விட்டார்களா? இல்லை.

காகமும் – குயிலும்

இதனையடுத்துப் பேசிய பொத்துவில் இன்ரலக்சுவல் சொசைட்டியின் முக்கியஸ்தரான ஊடகவியலாளர் முஸ்ஸர்ரப்; “காக்கையின் கூட்டில் சில குயில்கள் முட்டையிட்டுச் செல்வது வழமைதான்” என்று கூறி, சுகாதார அமைச்சர் நசீரை விடாமல் தாக்கினார். முதலமைச்சரை பொத்துவில் இன்ரலக்சுவல் சொசைட்டியினர் அழைத்து வர, தான் அழைத்ததன் பேரில்தான் முதலமைச்சர் இங்கு வந்துள்ளார் என்று, நசீர் கூறியமைக்கு பதிலடியாக முஸ்ஸர்ரப்பின் காக்கை – குயில் கதை அமைந்தது.

ஆக, பொத்துவில் இன்ரலக்சுவல் சொசைட்டியினர் – பெயருக்கேற்ப, தாங்கள் புத்திசாலிகள் என்பதை நிரூபித்திருந்தனர். தவத்தை அழைக்காமலும், நசீரை அழைத்தும் அவர்கள் அசிங்கப்படுத்திய விதம் நாசூக்கானது; ஆனால், கடுமையானது.

மக்களை முட்டாள்கள் என்று நினைப்பவர்களுக்கு இவை நல்ல படிப்பினைகள்தான்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்