நோயாளியின் நிலையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலை: எட்டிப் பாருங்கள் சுகாதார அமைச்சரே

🕔 March 11, 2017

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக, அங்குள்ள உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்த வைத்தியசாலைக்கு ஐந்து வைத்தியர்கள் தேவையாக உள்ள நிலையில், மூன்று வைத்தியர்கள் மாத்திரமே இங்கு பணியாற்றி வருகின்றனர்.

நாளொன்றுக்கு அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் 250 க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அதேவேளை, நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறும் வாட்களிலும் பெரும் எண்ணிக்கையானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், இந்த வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையினை உடனடியாக தீர்க்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த வைத்திசாலையின் முதல் மாடியில் பெண்கள் மற்றும் சிறுவர் வாட்கள் அமைந்துள்ளன. சில சமயங்களில் நோயாளர்களை சக்கர நாற்காலியில் வைத்து, படிக்கட்டுகளினூடாக வாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலைவரம் ஏற்படும் போது, நோயாளர்களும் பணியாளர்களும் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. எனவே, நோயாளர்களை முதல் மாடியில் அமைந்துள்ள வாட்டுக்கு கொண்டு செல்லும் பொருட்டு, இங்கு லிப்ற் வசதி மேற்கொள்ளப்பட  வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையானது, ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்எம். நசீர் கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் நசீர் இதனைக் கூறினார்.

ஆயினும், அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை இதுவரை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்படவில்லை.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்