வீழ்ச்சியுள்ள சாய்ந்தமருதின் கல்வி நிலையை முன்னேற்ற வருமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் அழைப்பு

🕔 January 23, 2017

Harees - 012– எம்.வை. அமீர் –

னைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது சாய்ந்தமருதின் கல்விநிலையானது பின்னோக்கிச் செல்வதாகவும் மிகவும் ஆபத்தான இவ்வாறானதொரு நிலையை சீர்செய்ய அனைவரும் இணைந்து செயற்பட ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுப்பதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

யஹ்யாகான் பௌண்டேசனின் ஏற்பாட்டில்  கடந்த 2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் தேர்ச்சியுற்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த மாணவர்களை பாராட்டி, அம்மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஊக்குவிப்புப் பணம் வழங்கும் நிகழ்வும் சாய்ந்தமருது கல்விக்கோட்டத்துக்குள் கல்வியைத் தொடர உதவி தேவையுடைய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் சனிக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

யஹ்யாகான் பௌண்டேசனின் தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான  ஏ.சி. யஹ்யாகான் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“அரசாங்கம் கல்விக்காக பெருமளவான பணத்தை செலவிடுகிறது. இதில் வருடாவருடம் பல்கலைக்கழகங்களுக்குச் செல்பவர்கள் மிகச்சொற்பமானவர்களே. ஏனையவர்கள் தங்களது எதிர்காலத்தை தீர்மானிப்பதில் திண்டாடுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு வழிகாட்டல் என்பது அவசியமானதும் அவசரமானதுமாகும். உலகம் இப்போது தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக, சகல துறைகளிலும் முன்னேற்றமடைந்து வருகின்றது. இவ்வாறான சூழலில் நாங்கள் கடந்த காலத்திலேயே தொடர்ந்தும் இருக்க முடியாது. எங்களது சந்ததிகளையும் எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களாக வழிகாட்ட வேண்டியது எங்கள் ஒவ்வொருவரின் கட்டாய கடமையாகும்.

யஹ்யாகான் பௌண்டேசனின் ஸ்தாபகர் யஹ்யாகான் போன்று, நாங்கள் அனைவரும் நமது எதிர்கால சந்ததிகளுக்காக, அவர்களது கல்வியை மேன்படச்செய்ய எங்களுக்கிடையே பேதங்கள் துறந்து ஒன்றுபடவேண்டும். சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் தலைமையில் இங்குள்ள பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளடங்கலாக குழு ஒன்றை அமைத்துள்ளோம். அதில் நமது சமூகத்தின் கல்வி மேன்பாட்டில் அக்கறையுள்ள அனைவரும் இணைந்து அவரவர் பங்களிப்பை வழங்க முடியும். இப்பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், என்னாலான அனைத்து விடயங்களையும் செய்ய நான் தயாராய் உள்ளேன்.

சாய்ந்தமருது கல்முனைப் பிரதேசத்தில் நல்ல கல்விச்சூழல் இருக்கின்றது என்று, கொழும்பில் இருந்தும் கண்டியில் இருந்தும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் பெரும் பெரும் செல்வந்தர்கள் தங்களது பிள்ளைகளை நமது பிரதேச பாடசாலைகளில் இணைத்து கல்வி புகட்டுகின்றனர். ஆனால் நமது பிரதேச பெற்றோர் எங்களிடமுள்ள வளங்களை சரியானமுறையில் பிரயோசனப்படுத்த வில்லை. இவ்வாறான நிலை மாறவேண்டும்.

கல்வியில் ஒருகாலத்தில் கொடிகட்டிப்பறந்த இவ்வூர்கள் இப்போது பின்னிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களை நாங்கள் கண்டறியவேண்டும். வெளிவந்துள்ள பரீட்சை முடிவுகளின்படி, கல்முனை கல்வி வலயத்தில் சாய்ந்தமருது கல்விக்கோட்டம் கடைசிநிலையில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இது மிகவும் அபாயகரமானதாகும்.  இவ்வாறான நிலையை மாற்றியமைக்க கல்விச் சீர்திருத்த அவசரகால நிலை ஒன்றை பிரகடனப்படுத்துகிறேன்.

சில பிரதேசங்களில் புலமைப்பரிசில் பரீட்சையில் 17% மாணவர்கள் சித்தியடைகின்றபோது சாய்ந்தமருதில் 5% மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். ஒருகாலத்தில் மிகக்குறைந்த நிலையில் இருந்த சில பிரதேசங்களின் கல்வி முன்னேற்றம் பெருவாரியாக உயர்ந்துள்ளது. அதற்கான காரணத்தை நாங்கள் அறிய வேண்டும். பெற்றோர் அதிபர் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புதான் இதற்கு மிகப்பிரதானமாகும். அத்துடன் இப்பிராந்தியத்தில் உள்ள வசதிபடைத்தோர் அவர்களின் செல்வத்திலிருந்து குறிப்பிட்ட பிரதேசத்தின் கல்வி மேன்பாட்டுக்காக செலவிடவேண்டும். அத்துடன் இங்குள்ள கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி மேன்பாட்டுக்கான திட்டங்களை வகுத்து, எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய  கல்விச்சமூகத்தை உருவாக்க முன்வரவேண்டும்.

அயல்பிராந்திய பாடசாலைகளால் தங்களது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு திட்டங்களை வகுத்து செயற்படுத்த முடிகிறது. ஏன் நமது பிராந்திய பாடாசாலைகளில் அவ்வாறான திட்டங்களை அமுல்படுத்த முடியாது. 

நாங்கள் எல்லோரும் சிந்திக்கவேண்டும். எதிர்காலத்தில் நமதுபிள்ளைகள் சிறந்த கல்வி வழிக்காட்டல் இல்லாததன் காரணமாக தொழில் சந்தையில் பின்தள்ளப்படலாம். கடந்த காலங்களை பாடங்களாக எடுத்து, எதிர்கால சந்ததிகளுக்காக நாம் ஒவ்வொருவரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்” என்றார்.Harees - 013

Comments

புதிது பேஸ்புக் பக்கம்