மு.கா. தலைவரின் போலி முகம்: கிழியும் முகத்திரை – 01

🕔 January 22, 2017

Hakeem - 643 – முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் இறுதி பேராளர் மாநாடு கடந்த 2015 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 07 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்றது. அதற்கு முந்தைய நாள் 06ஆம் திகதி, கட்சியின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான், மு.காங்கிரசின் நிருவாக சபைக்குரிய நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மறுநாள் கண்டியில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில், இந்தத் தெரிவுக்கான அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

06ஆம் திகதி நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தில், சில பொறுப்புகளுக்கு புதிதாக செயலாளர் பதவிகளை உருவாக்க வேண்டுமென கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் பரிந்துரை செய்தார். சபையும் அதனை ஏற்றுக் கொண்டது. ஆனால், அதற்கு முன்னர், ஹக்கீமுடைய பரிந்துரை தொடர்பில் – தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் உள்ளிட்ட சிலர் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தனர்.

மேற்படி கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் முழுவதுமாக ஆங்கிலத்திலேயே பேசினார். அப்படி அவர் பேசியமைக்கு ஒரு காரணம் இருந்தது. உயர்பீடத்தில் அங்கத்தவர்களாக உள்ளோரில் அரைவாசிக்கும் அதிகமானோருக்கு ஆங்கில மொழி தெரியாது. மிகுதி உள்ளோரில் அரைவாசிப் பேருக்கு ஆங்கில மொழியில் சரளமான புலமையில்லை. உயர்பீடத்தில் 90 உறுப்பினர்கள் உள்ளனர்.

கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் ஹக்கீம் பரிந்துரை செய்த செயலாளர் பதவிகளில் ஒன்றுதான், கட்சியின் உயர்பீடத்துக்கான செயலாளர் பதவியாகும். இந்தப் பதவி குறித்து ஹக்கீம் பின்வருமாறு ஆங்கிலத்தில் விளக்கமளித்தார்.

உயர்பீட செயலாளர் பதவிக்குரிய நபரை கட்சித் தலைவரே நியமிப்பார்.

உயர் பீட செலாளரானவர், கட்சியின் உயர் பீடத்துக்குரிய முழுநேர செயலாளராக செயற்படுவார்.

இந்தப் பதவியை வகிப்பவர் இரண்டு பேராளர் மாநாடுக்கு இடைப்பட்ட காலத்துக்குரியவராக இருப்பார்.

உயர்பீட கூட்டங்களின் குறிப்பு எழுதுதல் மற்றும் அவற்றுக்குப் பொறுப்பாக இருப்பார்.

இந்தப் பதவியை வகிப்பவர் எந்தவிதமான அரசியல் பதவிகளையும் வகிக்க மாட்டார்.

உயர் பீட செயலாளராகப் பதவி வகிப்பவருக்கு சம்பளம் வழங்கப்படும்.

மேற்படி உயர்பீட செயலாளர் பதவிக்கு சம்மாந்துறையைச் சேர்ந்த மன்சூர் ஏ. காதர் என்பவர், பின்னர் நியமிக்கப்பட்டார். மு.காங்கிரசின் செயலாளர் நாயகமாக முன்னைய காலங்களைப் போன்று, கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் எம்.ரி. ஹசனலி தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் உயர்பீடத் தீர்மானத்துக்கு முரணாக, தேர்தல் ஆணையாளருக்கு மு.கா. தலைவர் ஒரு விடயத்தை எழுத்து மூலம் அறிவித்தார். அதாவது, மு.காங்கிரசின் செயலாளராக மன்சூர் ஏ. காதர் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும், அவர்தான் மு.கா.வின் அதிகாரம் கொண்ட செயலாளராகச் செயற்படுவார் என்றும் மு.கா. தலைவர் ஹக்கீம் அறிவித்தார்.

அதாவது, கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் – உயர்பீடத்துக்கான செயலாளராக தெரிவு செய்யப்பட்ட நபரை, மிகவும் மோசடியான முறையில், அதிகாரம் கொண்ட செயலாளர் என தேர்தல் ஆணையாளருக்கு ஹக்கீம் அறிவித்தார்.

இதன் பின்னர் கட்சிக்குள் நிகழ்ந்த பிரச்சினைகள் தொடர்பில் வாசகர்கள் அறிவீர்கள்.

எவ்வாறாயினும், இது தொடர்பான பிரச்சினைகள் முற்றிய போது, கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் – தான் தெரிவித்த பல விடயங்களை, பின்னர் அவ்வாறு கூறவேயில்லை என்று ஹக்கீம் மறுத்துப் பேசத் தொடங்கினார்.

குறிப்பாக, உயர்பீட செயலாளருக்கு சம்பளம் வழங்கப்படும் என்று, தான் ஒருபோதும் கூறவேயில்லை என, அண்மையில நடைபெற்ற உயர்பீடக் கூட்டங்களில் ரஊப் ஹக்கீம் மிகப் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். ஆனால், அந்த உயர்பீடக் கூட்டத்தில் மார்க்க அறிஞர்கள், சட்டத்தரணிகள் என்று பலர் இருந்த போதும், ரஊப் ஹக்கீம் பொய் கூறுகிறார் என்பதை, அங்கு யாரும் அவர் முகத்துக்கு எதிராகக் கூறுவதற்கு தைரியம் பெற்றிருக்கவில்லை.

மேலும், உயர்பீட கூட்டக் குறிப்புகளை எழுதுவதற்கு நியமிக்கப்பட்ட ஒருவரை, கட்சியின் அதிகாரம் கொண்ட செயலாளர் என்று, தேர்தல் ஆணையாளருக்கு எவ்வாறு நீங்கள் அறிவிக்க முடியும் என்று, மு.கா. தலைவரை எந்தவொரு உயர்பீட உறுப்பினரும் இதுவரை கேட்கவுமில்லை.

அப்படிக் கேட்டால், தங்கள் அரசியலுக்கு மு.கா. தலைவர் ‘நலமடித்து விடுவார்’ என்று, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் அச்சப்படுகின்றார்கள்.

எனவே, மு.காங்கிரசின் கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் – அன்றைய தினம் உயர்பீட செயலாளர் பதவி குறித்து, கட்சித் தலைவர் ஹக்கீம் என்ன கூறினார் என்பதை, ‘புதிது’ செய்தித் தளம் தேடத் தொடங்கியதில் நமக்கு முக்கிய ஆவணங்கள் சிக்கின.  அவற்றில் ஒன்றுதான், மு.கா.வின் கட்டாய உச்சபீடக் கூட்டம் நடைபெற்றபோது மேற்கொள்ளப்பட்ட ஒலிப்பதிவாகும்.

நீண்ட அந்த ஒலிப்பதிவு மிக முக்கயமான சாட்சியமாகும். அதில் ஒரு பகுதியை இங்கு வாசகர்களுக்காக வழங்குகின்றோம்.

இது ஆரம்பம்தான். போகப் போக இன்னும் பல ஆவணங்களை அம்பலப்படுத்துவதற்குத் தயாராக உள்ளோம். அப்போது, இன்னும் பலரின் முக மூடிகளும் கிழியும் நிலை ஏற்படும்.

மு.கா.வின் கட்டாய உயர்பீடக் கூட்டத்தில், உயர்பீட செயலாளர் பதவி குறித்து கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் என்ன சொன்னார் என்பதை, இப்போது கேளுங்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்