கடவுளுக்கு சட்டமில்லை

🕔 November 25, 2016

article-mtm-097– முகம்மது தம்பி மரைக்கார் –

ரவாரத்துடன் மாயக்கல்லி மலையில் ஆரம்பிக்கப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சிகள், மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருக்கின்றன. எவையெல்லாம் அங்கு நடக்குமென்று சிறுபான்மை மக்கள் அச்சப்பட்டனரோ அவையனைத்துக்குமான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏமாற்றமும், கவலையும் எஞ்சிய நிலையில், சுற்றியுள்ள மக்கள் தங்கள் இயலாமையினை நொந்து கொண்டு, நடக்கின்றவற்றினை தூர நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு கிராமத்திலுள்ள மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமையானது, பேசிப் பேசி அலுத்து விட்ட விவகாரமாக மாறிவிட்டது. இது தொடர்பில் ஊடகங்களில் மட்டும் பொங்கிய சிறுபான்மையினத்துச் சிங்கங்கள், தங்கள் சமூகக் கடைமையை நிறைவேற்றிக்கொண்ட திருப்தியில் வால்களைச் சுருட்டி அடங்கிக் கொண்டன. இந்த நிலையில், மாயக்கல்லி மலை உச்சியில் வைக்கப்பட்ட புத்தர் சிலையினை முன்னிறுத்தி, அங்கு ஒரு விகாரை அமைக்கும் ஏற்பாடுகள் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

பௌத்தர்கள் யாருமற்ற ஓரிடத்தில், புத்தர் சிலையினைக் கொண்டு வந்து எப்படி வைக்க முடியும் என்கிற கேள்விகளிலுள்ள நியாயங்கள் எவையும் எடுபடவில்லை. அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு அருகில், இப்போது விகாரையொன்றினை நிர்மாணிப்பதற்கான எழுத்து மூல அங்கீகாரங்கள் பெறப்பட்டு, அதற்குரிய வேலைகள் ஆரம்பமாகும் தருவாயில் உள்ளன.

மாயக்கல்லி மலையும், அதனைச் சுற்றியுள்ள நிலப்பரப்பும், தொல்லியல் திணைக்களத்துக்குச் சொந்தமானது எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியாகும். தொல்லியல் பொருட்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட பகுதியில்தான் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தொல்லியல் திணைக்களம் எப்படி அனுமதித்தது என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், இப்போது மலையடிவாரத்தில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான அனுமதியினை தொல்லியல் திணைக்களம் எழுத்து மூலம் வழங்கியுள்ளது. இந்த அனுமதியினை அடிப்படையாக வைத்து, அம்பாறை மாவட்ட செயலகமும் – விகாரை அமைப்பதற்கு எழுத்து மூலம் அனுமதியளித்துள்ளது. ‘மாணிக்கமடு – தீகவாபி நிருவாகத்குட்பட்ட ரஜ மகா விகாரையினுடைய அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்தல்’ எனும் தலைப்பிடப்பட்ட கடிதங்கள் மூலம் தொல்லியல் திணைக்களமும், அம்பாறை மாவட்ட செயலகமும் மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதற்கான அனுமதியினை வழங்கியுள்ளன.

மாயக்கல்லி மலையடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை முன்னிறுத்தி நிர்மாணிக்கப்படவுள்ள விகாரைக்காக ஒரு பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுதான் ‘மாணிக்கமடு – தீகவாபி ரஜ மகா விகாரை’ என்பதாகும். அந்தப் பெயரைத்தான் தொல்லியல் திணைக்களமும், அம்பாறை மாவட்ட செயலகமும் தமது கடிதங்களில் பயன்படுத்தியுள்ளன. ஆனால், இந்தப் பெயரில் அச்சமூட்டுகின்ற இன்னுமொரு அரசியல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாணிக்கமடு என்பது இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒரு தமிழர் கிராமம். தீகவாபி என்பது இறக்காமத்துக்கு அடுத்துள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள சிங்கள மக்கள் வாழும் ஒரு கிராமம். அதாவது, மாணிக்கமடுவும் தீகவாபியும் இருவேறு பிரதேச செயலகங்களின் நிருவாகத்தின் கீழ் வருகின்ற இரண்டு நிலப்பரப்புகளாகும். ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட கடிதங்கள், மாணிக்கமடுவினையும், தீகவாபியையும் இணைந்ததொரு பிரதேசமாகக் காண்பிக்க முற்படுகின்றமையினை அவதானிக்க முடிகிறது. எதிர்காலத்தில், தீகவாபியின் எல்லையாக மாணிக்கமடுவினை மாற்றுவதற்கான – முன் முயற்சியாக இது இருக்கிறதா என்கிற அச்சமும் இங்குள்ள சிறுபான்மை மக்களிடம் எழுந்துள்ளது.

இன்னொருபுறம், மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிரான வழங்கு, அம்பாறை மாவட்ட நீதவான் நீதிமன்றில் உள்ளது. இந்த நிலையில்தான் அங்கு விகாரை அமைப்பதற்கான தீர்மானங்கள் எட்டப்பட்டிருக்கின்றன. இதேவேளை, கடந்த போயா தினத்தன்று, மாயக்கல்லி மலைக்கு வந்த பௌத்த பிக்களும், அதிகளவான பொதுமக்களும் இணைந்து, சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு விட்டுச் சென்றுள்ளனர். பொலிஸார் இதன்போது பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

‘மாயக்கல்லி மலையில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை ராசா வந்தாலும் அகற்ற முடியாது’ என்று, ஏற்கனவே அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் கூறியிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இம்மாதம் 03ஆம் திகதி நடைபெற்ற இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே, நாடாமன்ற உறுப்பினர் மன்சூர் அவ்வாறு தெரிவித்தார். இது குறித்து முன்னைய கட்டுரையொன்றில் எழுதியிருந்தோம். அதே கூட்டத்தில் அவர் இன்னுமொரு விடயத்தினையும் கூறினார். அதாவது, ‘மாயக்கல்லி மலைப் பகுதியில் இனிமேல் ஏதாவது நிர்மாண வேலைகள் செய்வதாக இருந்தால், இறக்காமம் உள்ளுராட்சி மன்றத்தின் அனுமதியினைப் பெற்றுக்கொண்டுதான் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கின்றோம். அதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் மும்மதத்தவர்களையும் கொண்டதொரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினருக்குத் தெரியாமலும், மாயக்கல்லி மலைப் பகுதியில் எதுவித நிர்மாணங்களும் நடைபெறக்கூடாது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது. எனவே, இவற்றினை மீறி ஏதாவது சட்டத்துக்கு முரணாக, நிர்மாண வேலைகள் அங்கு இடம்பெற்றால் நாம் வழக்குத் தாக்கல் செய்வோம். அந்த வழக்கினை நான் ஏற்றுக்கொள்வேன்’ என்று மன்சூர் அங்கு தெரிவித்திருந்தார்.

தற்போது, மாயக்கல்லி மலைப்பகுதியில் விகாரை நிர்மாணிக்கப்படுவதற்கு இறக்காமம் உள்ளுராட்சி சபை அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரத்தினையடுத்து, அம்பாறை மாவட்ட செயலாளரால் உருவாக்கப்பட்ட மும்மதத்தவர்களையும் கொண்ட குழு கூட்டப்பட்டு, விகாரை அமைப்பது தொடர்பில் தெரியப்படுத்தப்படவுமில்லை. இவை எதுவும் நடக்காமலேயே, மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரையொன்று அமைப்பதற்கான அனுமதியினை தொல்லியல் திணைக்களமும், மாவட்ட செயலகமும் வழங்கியுள்ளன. அப்படியென்றால், இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் வாக்குறுதியளித்தவாறு வழக்குத் தாக்கல் செய்வாரா என்று பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர். மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் சம்மதம் தெரிவித்திருந்தார் என்று ஏற்கனவே பரவிய செய்தியொன்றின் மூலம், இந்த விவகாரத்தில் அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்படுத்தப்பட்டிருந்தது. அந்தக் களங்கத்தினை துடைத்தெறிவதற்கான சந்தர்ப்பமாக, நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் இப்போதைய நிலைவரத்தினைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இது இவ்வாறிருக்க, தொல்லியல் திணைக்களத்தின் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இடமொன்றில் பொதுமக்கள் உட்புகுந்து அங்குள்ள பொருட்களை எடுத்துச் செல்வதோ அல்லது அங்கு வேறு பொருட்களைக்கொண்டு சென்று வைப்பதோ தடைசெய்யப்பட்ட செயற்பாடுகளாகும். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முல்லிக்குளத்து மலையும் அதனை அண்டிய பகுதிகளும் தொல்லியல் பகுதிகளாக அடையாளமிடப்பட்டுள்ளன. மலைக்கு அருகில் முஸ்லிம் மக்களின் நெற்காணிகள் உள்ளன. இந்த நிலையில், தமது காணிகளுக்குள் சென்ற மக்களை அதிகாரிகள் விரட்டியடித்ததோடு, கைது செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனால், தொல்லியல் பகுதியாக அடையாளமிடப்பட்டுள்ள மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையினை வைப்பதற்கும், மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதற்கும் தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தொல்லியல் திணைக்களத்தினர் சட்டத்தினை இரண்டு தரப்பினருக்கு இரண்டு விதமாகப்பயன்படுத்தியுள்ளனர் என்கிற விமர்சனமொன்றும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதற்கான அனுமதியினை இறக்காமம் பிரதேச செயலகம் வழங்கியுள்ளதா என, பிரதேச செயலாளர் எம்.எம்.எம். நசீரிடம் கேட்டோம். தாம் அவ்வாறான அனுமதிகள் எவற்றினையும் வழங்கவில்லை என்று அவர் கூறினார். இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் தன்னைத் தொடர்புகொண்டு, குறித்த விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று தன்னிடம் கூறிதாகவும், இறக்காமம் ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் பேசிய பின்னரே, இது குறித்து – ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும் என்று தன்னை வலியுறுத்தியதாகவும், பிரதேச செயலாளர் நசீர் நம்மிடம் தெரிவித்தார். இதேவேளை முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் தன்னைத் தொடர்பு கொண்டு பேசிய விடயங்களை, அம்பாறை மாவட்ட செயலாளருக்கு – தான் தெரியப்படுத்தி விட்டதாகவும், இறக்காமம் பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

மேலும், மலையில் சிலை வைப்பதற்கும் தான் அனுமதி வழங்கவில்லை என்பதையும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார். ‘சிலர் என்னிடம் வந்து மலையில் சிலை வைப்பதற்கான அனுமதியினை கேட்டனர். இறக்காமம் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த 03ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் பேசி, அவர்களின் தீர்மானம் என்ன என்பதைத் தெரிந்து கொண்ட பிறகுதான் என்னால், இது தொடர்பாக ஒரு முடிவினை எடுக்க முடிவும். எனவே, 03ஆம் திகதிதக்கு பின்னர் வாருங்கள் என்று, சிலை வைக்க அனுமதி கோரியவர்களிடம் கூறினேன். ஆனால், இறக்காமம் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நொவம்பர் 03ஆம் திகதி நடைபெறுவதற்கு முன்பாகவே, அவர்கள் சிலையினை வைத்து விட்டுச் சென்று விட்டார்கள்’ என்றார் பிரதேச செயலாளர் நசீர்.

மாயக்கல்லி மலையில் நடைபெறுகின்ற விடயங்களையும், அதனை முன்னிறுத்தி நடைபெறுகின்ற செயற்பாடுகளையும் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு, அவை அனைத்தும் மிக நேர்த்தியாக முன்திட்டமிடப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவற்றினைத் தடுத்து நிறுத்துவதற்கான காத்திரமுடைய செயற்பாடுகள் எவையும் சிறுபான்மை சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும். ‘மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையினை அகற்ற வேண்டும்’ என்று தமிழ் பத்திரிகைகளில் ஜனாதிபதிக்கு அறிக்கை விடுவதோடு, முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது கடமைகளை முடித்துக் கொள்கின்றனர். இதற்கு ஒருபடி மேலே சென்று – அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்களுடன் இது விடயத்தில் தாம் பேசியுள்ளதாகவும், நல்லவை விரைவில் நடக்கும் என்றும், சில அரசியல் தலைவர்கள் மக்களுக்குத் தெரிவித்திருந்தனர். ஆனால், அவர்கள் கூறிய எவைவுமே நடக்கவில்லை.

புத்தர் சிலையொன்றினை ஒரு மலையின் உச்சியில் வைப்பதாலும், அதனையொட்டி விகாரையினை அமைப்பதாலும், சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு அப்படி என்னதான் குறைந்து விடப்போகிறது என்கிற தொனியில் சிலர் ஊடகங்களில் எழுதிக் கொண்டிருப்பதையும் இந்தத் தருணங்களில் காணக்கிடைக்கின்றன.

மாயக்கல்லி மலையில் நடப்பது, மதம் சார்ந்த பிரச்சினையல்ல என்பதைப் புரிந்துகொள்ளாதவர்களின் கேள்விகளே அவையாகும்.

சிறுபான்மை மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக, புத்தரின் விரல்பிடித்து வரும் சூழ்ச்சிக்காரர்களின் அரசியல் பற்றி அறிந்தவர்களின் அச்சத்தை, மேலே உள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டிருப்பது உண்மையில் புத்தர் சிலையல்ல. அது – ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இடப்பட்டிருக்கும் ஒரு எல்லைக் கல்லாகும்.letter-001 letter-002

Comments

புதிது பேஸ்புக் பக்கம்