பட்டதாரிகளை அரச சேவையில் சேர்த்துக்கொள்வதற்குரிய குறைந்தபட்ச வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கான பிரேரணை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் வயதெல்லை தற்போது 35 ஆகும். வேலையற்ற பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், தங்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுதல், பட்டதாரிகளை அரச தொழிலில் இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லையை 45 ஆக உயர்த்துதல், அரசியல் நலனுக்கான ஆட்சேர்ப்புகளை நிறுத்துதல் மற்றும் மாகாண சபைகளில் நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வேலையற்ற பட்டதாரிகள் முன்வைத்துள்ளனர்.
தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் என கடந்த காலத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தெரிவத்த போதிலும், இதுவரை அதற்காக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என, வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.



