இலங்கையில் முலீடு செய்வதற்கு சவூதி இளவரசர் இணக்கம்; அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு
🕔 April 14, 2016

இதற்கமைய அவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அரச மட்ட உயர் அதிகாரிகளுடன் இரு தரப்பு பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சவூதி அரேபியா சென்றுள்ள ஹிரா பௌண்டேசன் தலைவரும், ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நேற்று புதன்கிழமை சவூதி இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பைசல் பின் அப்துல் மஜீத் அஸ் சவூதை ஜித்தாவில் அமைந்துள்ள அவரது மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.
சர்வதேச ரீதியாக பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளில் ஈடுபாடு கொண்ட இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பைசலை, இலங்கையிலும் முதலீடு செய்யும்மாறும், இலங்கையினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யுமாறும் இந்த சந்திப்பின் போது, ராஜாங்க அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இளவரசர் உடனடியாக இலங்கைக்கு விஜயம் செய்வதற்கும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தன்னுடைய முழுப் பங்களிப்பை செய்வதாக உறுதியளித்தார்.
இதேவேளை அமைக்கபட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பாகவும் இளவரசருக்கு ராஜாங்க அமைச்சர் விளக்கமளித்தார். பல்கலைக்கழகத்துக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இளவரசர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் அப்துல் காதர் மசூர் மௌலானா மற்றும் ஹிரா பௌண்டேசன் செயலாளர் மும்தாஸ் மதனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
