
சீன நாட்டவர் ஒருவருக்குச் சொந்தமான ரூ. 200 மில்லியன் கொள்ளை வழக்கில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (22) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுபிட்டி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கி சரணடைந்த பின்னர், அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இம்மாதம் 13ஆம் திகதியன்று கொள்ளுபிட்டியில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது.

பொலிஸார் போல் வேடமிட்ட இருவர், வாகனத்தில் பயணித்த சீன நாட்டவர் ஒருவரை வழிமறித்தனர். அவர்கள் அவரது பயண ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு, ரூ. 200 மில்லியன் இருந்த ஒரு பையுடன் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அருகில் போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்டிருந்த கொள்ளுபிட்டி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், இந்தச் சம்பவத்தைக் கண்டு ஒரு சந்தேக நபரை கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அவர் தனியாகவே செயல்பட்டதாகக் கூறினாலும், மேலதிக விசாரணை மற்றும் தொலைபேசி பகுப்பாய்வின் மூலம் மேலும் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டனர்.
பின்னர், மற்றொரு சீன நாட்டவர் உட்பட மேலும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருடப்பட்ட பணத்தைப் பங்கிட்டுக்கொள்வதற்காக சாந்த பண்டாராவின் மகனும் மற்றவர்களும் அருகில் காத்திருந்ததாகவும், ஆனால் கைதுகள் குறித்து அறிந்ததும் தப்பி ஓடிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரின் மகன் பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து, கைது செய்யப்பட்டார்.


