தலைப்புச் செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வு வயதை இலங்கை அதிகரித்தால், சிம்பாப்வேயின் நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை

தவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயதை பரந்த பொது ஆலோசனையின்றி இலங்கை நீடித்தால், சிம்பாப்வேயின் சர்ச்சைக்குரிய நீதித்துறைப் போன்று – நெருக்கடியை சந்திக்கும் அபாயம் உள்ளது என, பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திரு எச்சரித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரிகள் சங்கம் இன்று (04) ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய ஸ்டீவன் திரு, முன்மொழியப்பட்ட ஓய்வு வயது பிரச்சினை அல்ல, மாறாக அரசியலமைப்புத் திருத்தத்தின் நேரம், முறை மற்றும் பிரயோகம் ஆகியவையே பிரச்சினை என்று கூறினார்.

சிம்பாப்வேயுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், அந்நாட்டின் 2021ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தம், அப்போதைய பிரதம நீதியரசர் ஓய்வு பெறும் தருவாயில் இருந்தபோது, ​​விரைவுபடுத்தப்பட்ட செயல்முறையின் மூலம் – சிரேஷ்ட நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை 70-லிருந்து 75-ஆக உயர்த்தியதாகக் கூறினார்.

இந்த நடவடிக்கை சட்டரீதியான சவால்களையும் பொதுமக்களின் விமர்சனங்களையும் தூண்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிம்பாப்வேயின் உச்ச நீதிமன்றம் ஆரம்பத்தில், பதவியில் இருக்கும் நீதியரசர்களுக்கு இந்த நீடிப்பு பொருந்தாது என்று தீர்ப்பளித்தது.

அரசியலமைப்பு நீதிமன்றம் – பின்னர் அந்தத் தீர்ப்பை ரத்து செய்தபோதிலும், இந்த நிகழ்வு நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை கடுமையாகச் சேதப்படுத்தியதாகவும், நிர்வாகத்தின் செல்வாக்கு குறித்த எண்ணங்களைத் தூண்டியதாகவும் அவர் கூறினார்.

“இலங்கை இந்த அரசியலமைப்பு ரீதியான திருப்புமுனையில் நிற்கும் இவ்வேளையில், சிம்பாப்வே நெருக்கடியிலிருந்து கிடைத்த படிப்பினையை நாட்டின் தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்று திரு கூறினார்.

விரிவான கலந்தாய்வு செயல்முறை இல்லாமல், தற்காலிகமான மற்றும் வெளிப்படையற்ற முறையில் நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பை இலங்கை தொடர்ந்தால், அது இதேபோன்ற சட்டபூர்வமான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும், நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குலைக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

நீதித்துறையைப் பாதிக்கும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், வெளிப்படையான பொது ஆலோசனையின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அவை பதவியில் இருக்கும் நீதியரசர்களுக்குப் பயனளிப்பதாகவோ அல்லது நீதிமன்றங்களின் அமைப்பைப் பாதிப்பதாகவோ ஒருபோதும் தோன்றக்கூடாது என்றும் திரு கூறினார்.

உச்ச நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் குறித்த – சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுக் கருத்தரங்கில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.